2010-12-20 15:01:38

பாகிஸ்தானில் கிறிஸ்மஸ் காலத்தில் மதுபானங்களைத் தடை செய்ய கிறிஸ்தவர்கள் முயற்சி


டிச.20, 2010. கிறிஸ்மஸ் காலத்தில் மதுபானங்களைத் தடை செய்யக் கோரி பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

‘மது மற்றும் சூதாட்டம் பாவத்தின் வழிகள் - உங்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்’ என்று கூறும் விளம்பர அட்டைகளை லாகூர், பஞ்சாப் நகரங்களின் பல பகுதிகளிலும் கிறிஸ்தவ அமைப்புக்கள் ஓட்டி வைத்துள்ளன.

மதுவினால் பல வித வாக்குவாதங்கள், கைகலப்புகள் உண்டாகின்றன என்றும், தரக்குறைவான கள்ளச் சாராயம் போன்ற மதுபானங்களால் பல ஏழைகள் உடல் நலத்தையும், முக்கியமாக பார்வையையும் இழக்கின்றனர் என்றும் Youhanabad பகுதியில் உள்ள பங்கு தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.

மது ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான தேவை எனினும், அதனை கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் வெளியிட்டிருப்பது சரியான முறையாகத் தெரியவில்லை என்றும் அருள்தந்தை எம்மானுவேல் கூறினார்.

இஸ்லாமியச் சட்டப்படி மது உற்பத்தி செய்வதும், மது அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் வாழும் பிற மதத்தவர், அரசிடம் அனுமதி பெற்று மது அருந்தும் வழிகள் அங்கு உண்டு. இதன்படி, பாகிஸ்தானில் 24,000 பேர் அரசின் அனுமதி பெற்றுள்ளனர் என்று ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.