2010-12-20 14:57:19

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


டிச.20, 2010. கிறிஸ்துவின் செய்தியை உலகமனைத்திற்கும் வழங்க கிறிஸ்தவ மேய்ப்பர்களுக்கு உதவும் வண்ணம் அம்மேய்ப்பர்களைப் புனித வளனின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனித வளனின் கண்ணோட்டத்தில் இயேசுவின் பிறப்பு குறித்து தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, புனித வளன் விவிலியத்தில் ஒரு நீதிமானாக, இறைச்சட்டத்திற்கு விசுவாசம் உள்ளவராக மற்றும் இறைவிருப்பத்தை எப்போதும் நிறைவேற்ற தயாராக உள்ளவராகக் காண்பிக்கப்பட்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார். இறைதூதர் மூலம் இயேசுவின் பிறப்புப் பற்றியும், மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களை இயேசு காப்பாற்றுவார் என்பது குறித்தும் இறைத்தூதர் மூலம் அறிய வரும் புனித வளன், அன்னை மரியை இரகசியமாக தள்ளிவைக்கும் தன் எண்ணத்தைக் கைவிட்டு அவரை ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில், இறைத்திட்டத்தை அன்னைமரியில் கண்டார் புனித வளன் என்றார் பாப்பிறை. இறைத்தூதுவர் தனக்கு கட்டளையிட்டதையே புனித வளன் ஆற்றினார், அதுவும் அதுவே சரியானது என்ற உறுதிப்பாட்டுடனேயே செய்தார் என்ற பாப்பிறை, அவர் தன் வருங்காலத்தை இறைவனின் கைகளில் முற்றிலுமாக ஒப்படைத்து நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்பட்டார் என புனித வளனுக்குப் புகழாரம் சூட்டினார். இயேசுவின் வார்த்தைகளான தாழ்ச்சியுடன் கூடிய தினசரிப் பரிந்துரைகளை கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எடுத்துரைக்க மேய்ப்பர்கள் உதவும் வண்ணம் அவர்களைப் புனித வளனின் கைகளில் ஒப்படைப்பதாக தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது மேலும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.