2010-12-20 14:58:46

அமைதிக்கான பாதை மதவிடுதலையே என்பது குறித்து திருப்பீடப்பேச்சாளர்


டிச.20, 2010. அமைதியின் உண்மையான எதிரிகள் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக மததீவிரவாதிகளும், மத அடிப்படைவாதிகளும், தீவிர இறைமறுப்புக் கொள்கையாளர்களுமே என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.

மத சுதந்திரம் அமைதிக்கான பாதை என்ற தலைப்பில் திருத்தந்தை, வரும் புத்தாண்டு தினத்திற்கான அமைதி செய்தியை வழங்கியுள்ளது பற்றி குறிப்பிட்ட இயேசு சபை குரு, தங்கள் விசுவாசத்திற்காக சித்ரவதைகளை அனுபவிப்பவர்களின் வரிசையில் இன்றைய கிறிஸ்தவர்களே முன்னணியில் உள்ளார்கள் என தெரிவித்தார்.

கிறிஸ்தவர்களே உலகத்தில் அதிகாரத்தில் இருப்பது போலவும் அவர்களாலேயே பிற மதத்தினர் சித்ரவதைப்படுத்தப்படுவது போலவும் ஒரு தப்பெண்ணம் சிலரிடம் உள்ளது என்ற கவலையை வெளியிட்ட திருப்பீடப்பேச்சாளர், ஆனால் உண்மை புள்ளிவிவரங்களைக் கொண்டு இம்மனப்போக்கை மாற்ற வேண்டிய நிலை உள்ளது என மேலும் கூறினார்.

மனிதகுலமனைத்திற்கும் நன்மை தரும் விதமாய் மனிதனின் மாண்பும் அடிப்படை உரிமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மையம் கொண்டதாய் திருத்தந்தையின் அமைதி செய்தி உள்ளது என கூறிய அருட்தந்தை லொம்பார்தி, இதன் காரணமாக இச்செய்தி கிறிஸ்தவர்களுக்கு மட்டுமானது அல்ல மாறாக அனைத்து மனிதகுலத்திற்குமானது என்பதையும் வலியுறுத்தினார். மற்றவர்களின் உரிமைகளை மதிக்காமல் நாம் ஓர் அமைதி சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதையும் எடுத்துரைத்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.