2010-12-18 16:22:23

நாளுமொரு நல்லெண்ணத்துடன் இணைந்து வரும் ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
மரியாவின் கணவரான யோசேப்பு அமைதியான ஒரு புனிதர். விவிலிய வார்த்தைகளின்படி அவர் ஒரு நேர்மையாளர். அவர் பேசியதாக நற்செய்தியில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. அவர் ஒன்றும் பேசியிருக்கத் தேவையில்லை, ஏனெனில் அவரது வாழ்வே ஒரு முழு நற்செய்தியாக இருந்தது. அவரை மையப்படுத்திய நற்செய்தி பகுதி இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
மரியாவின் கணவராய், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாய் யோசேப்பு தனிப்பட்ட ஓர் இடம் பிடித்துள்ளார். இவரைத் திருச்சபையும், நமது பக்தி முயற்சிகளும் வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகின்றன. நமக்கெல்லாம் தெரிந்த ஒரு சில நிலைகள் இதோ:
இவர் கன்னியர்களின் காவலர்.
குடும்பங்களுக்குக் காவலர்.
தொழிலாளர்களுக்குக் காவலர்.
நற்படிப்புக்குக் காவலர்.
நல்மரணத்திற்குக் காவலர்...
என்று பல வழிகளில் யோசேப்பைப் பெருமைப்படுத்துகிறோம்.
என்னைப் பொறுத்தவரை, மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம். இதை நான் ஒரு விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ கூறுவதாக எண்ண வேண்டாம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு என்பதுதான் நமது இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையம். முதலில் இன்றைய நற்செய்தியைக் கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 1: 18-24

மத்தேயு நற்செய்தியில் மேலும் இருமுறை யோசேப்பைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. இருமுறைகளும் அவர் கண்ட கனவுகள் பற்றியே கூறப்பட்டுள்ளது. மூன்று ஞானிகள் வந்து குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பியதும், நாம் வாசிக்கும் வரிகள் இவை:
மத்தேயு 2: 13 -14
அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 
எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்தி வருகிறது.
மத்தேயு 2: 19 -21
ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். 
மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், பாடங்கள் பல நமக்குப் புரியும். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். யோசேப்பு பயங்கரமான ஒரு சங்கடத்தில் சிக்கியிருப்பதை உணரலாம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் பேரிடியான உண்மை யோசேப்புக்குத் தெரிய வருகிறது. மரியா கருவுற்றிருந்தார். ஊரே போற்றும் அந்த உத்தமப் பெண் தனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது தனது பெருமை என்று எண்ணி வந்த யோசேப்புக்குக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிர்ச்சி இது. அவர் மனதில் வீசிய சூறாவளியை ஓரளவு நாம் உணரலாம்.
இந்தச் சூழலில் யோசேப்பு தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார். மரியாவின் கதை முடிந்திருக்கும், நம் மீட்பின் கதை வேறுவிதமாய் இருந்திருக்கும்.

ஒரு சில மாதங்களுக்கு முன், சகினே அஷ்டியானி (Sakineh Ashtiani ) என்ற 43 வயது தாய் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டுமென்று ஈரான் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அத்தண்டனை எவ்வளவு கொடூரமாய் நடத்தப்படுகிறதென்ற விவரங்கள் தரப்பட்டன. தண்டனை பெற்ற பெண் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்படுவார். அவரைச் சுற்றி நின்று மற்றவர்கள் (மனிதர்களா அவர்கள்?) அப்பெண்ணின் தலைமீது கல்லெறிந்து அப்பெண்ணைக் கொலை செய்வார்கள். இவ்விவரங்களை வாசித்தபோது, நாம் மனித குலத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வி மனதில் எழுந்தது.
பத்திரிகை, தொலைக்காட்சி இவை வழியாக வெளிச்சத்திற்கு வரும் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டு என்றால், வெளிச்சத்திற்கு வராமல் கொன்று புதைக்கப்படுவது ஆயிரமாயிரம் பெண்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கலாச்சாரம், அறிவியல் என்று பல வழிகளிலும் வளர்ந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் பெண்கள் நிலை இப்படி என்றால், யோசேப்பு வாழ்ந்த இஸ்ரயேல் காலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்தச் சிக்கலான சூழலில் யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்று தன் மனதை யோசேப்பு கல்லாக்கி இருந்தால், அவரிடம் இறைவனின் தூதர் நெருங்கியிருப்பாரா என்பது சந்தேகம் தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் பார்க்கலாம்: “யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்து கொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்.” என்பதே கனவில் யோசேப்பு பெற்ற செய்தி.

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்பும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.
காரணம் ஒன்று: பயங்கள், பதட்டங்கள் நம்மைச் சூழும் போது, வாழ்வின் பல அன்றாட நிகழ்வுகள், முக்கியமாக, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். யோசேப்பும் கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். கலக்கங்கள் நடுவிலும், யோசேப்பு கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம்: யோசேப்பு கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு க்ரீமை பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது மேல்தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?
ஆனால், மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்யச் சொல்லி வந்த கனவுகள்.
கருவுற்ற பெண்ணைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்வது;
ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும் தாயோடும் எகிப்துக்கு ஓடிச் செல்வது;
மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது...
என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவைகளை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களில் வரும் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொண்டதால், அந்தக் கனவுகளில் சொல்லப்பட்டவைகளைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று அழைக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன்.

இன்றைய நற்செய்தி யோசேப்பைக் குறித்து வேறொரு பாடத்தையும் நமக்குச் சொல்லித் தருகிறது. இந்த எண்ணங்களை Ron Rolheiser என்ற குருவின் கருத்துக்களுடன் இணைத்துப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
யோசேப்பு இஸ்ரயேல் பாரம்பரியத்தில் ஊறிய, நேர்மையான பக்திமான். பாரம்பரியத்தை மீறுவதென்பதை அவர் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அவரது கனவில் இறைவனின் தூதர் சொன்ன செய்தி பாரம்பரியத்திற்கு முரணானதாகத் தெரிந்தது யோசேப்புக்கு. திருமணத்திற்கு முன் ஒரு பெண் கருவுற்றால், அவர் இறைவனின் கட்டளைகளை மீறியவர்; இஸ்ரயேல் இனத்திற்குக் களங்கம் விளைவித்தவர் என்று மோசே தந்த சட்டமும், பாரம்பரியமும் சொல்கின்றன. இதற்கு நேர்மாறாக, கனவில் யோசேப்புக்குக் கிடைத்த செய்தி இருந்தது. கன்னியான ஒரு பெண் கருத்தரித்திருப்பது கடவுளின் செயல்; அதுவும் அவர் கருவில் தாங்கியிருப்பது கடவுளையே என்பது யோசேப்புக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
பாரம்பரியம், சட்டம் இவைகளில் யோசேப்புக்கு ஆழ்ந்த, வெறித்தனமான பற்றும், பக்தியும் இருந்திருந்தால், மரியாவின் நிலையை அறிந்ததும், ஊரைக் கூட்டி, பாரம்பரியத்தை நிலைநாட்டியிருப்பார். மரியாவின் மீது அவரே முதல் கல்லை எறிந்திருப்பார். ஆனால், யோசேப்பு பாரம்பரியத்தை, இறைவன் மீது கொண்ட பக்தியை சரியான முறையில் புரிந்தவராய் இருந்ததால், பாரம்பரியத்தைக் கடக்கக் கூடியவர் கடவுள் என்பதை உணர்ந்திருந்தார். கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கும் ஆகாசுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் தந்த அடையாளமும் இதேதானே என்பதை யோசேப்பின் மனம் எண்ணியிருக்கும். இறைவாக்கினர் எசாயா 7: 10-14 அதனால், தன் கனவில் கூறப்பட்டவைகளை மனதார நம்பி, செயல்பட்டார். கடவுளை நம்மோடு எம்மானுவேலாகத் தங்க வைத்தார்.
சாத்திரம், சம்பிரதாயம் சட்டம், பாரம்பரியம் இவைகள் எல்லாமே மனித குலத்தைக் காப்பாற்ற தேவையானவைதான். ஆனால், அவைகளையெல்லாம் கடந்து நிற்பவர் கடவுள். பாரம்பரியங்களைக் கடந்த, அல்லது அவைகளிலிருந்து முரண்பட்ட ஒரு வழியில் கடவுள் வந்து நம்மோடு தங்குவதாக இருந்தால், அவரை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா? பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது பாரம்பரியங்களை உடைத்து வரும் கடவுளைச் சந்திக்க நாமும் பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது உடைத்துச் செல்ல வேண்டியிருக்கும் யோசேப்பைப் போல. கனவுகளை வளர்ப்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். நம் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கு இக்கனவுகள் நம்மை அழைத்தால், அவ்வழைப்பை ஏற்போம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!







All the contents on this site are copyrighted ©.