2010-12-18 15:13:11

குழந்தைத் திருமணம் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களின் ஒரு வடிவம்


டிச.18,2010. குழந்தைத் திருமணம், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களின் ஒரு வடிவமாக இருக்கின்றது என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.

குழந்தைத் திருமணத்தைத் தடை செய்வதன் வழியாக சர்வதேச அளவில் சிறுமிகளைப் பாதுகாத்தல் எனும் விதிமுறையை அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட் அவை கொண்டு வந்துள்ளது.

இதையொட்டிக் கருத்துத் தெரிவித்த வத்திக்கான் Fides செய்தி நிறுவனம், கர்ப்பம், குழந்தை பிறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய பிரச்சனைகள், பல வளரும் நாடுகளில் சிறுமிகள் இறப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று கூறியது.

14ம் அதற்குக் குறைவான வயதில் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் சிறுமிகள், கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பின் போது இறக்கும் எண்ணிக்கை, 20க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதில் திருமணம் செய்யும் பெண்களின் இறப்புக்களைவிட ஐந்து மடங்கு அதிகம் என்று அச்செய்தி கூறுகிறது.

18 வயதை எட்டுமுன்பே திருமணமான சிறுமிகள் உலக அளவில் ஆறு கோடிக்கு மேல் உள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.