2010-12-18 15:08:24

ஏழைகளின் நலவாழ்வில் அதிக அக்கறை காட்ட அரசுகளின் அதிகாரிகளுக்குத் திருத்தந்தை வேண்டுகோள்


டிச.18,2010. ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போரின் நலவாழ்வுக்கு உதவும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறு அரசுகளின் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2011ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று கடைபிடிக்கப்படும் உலக நோயாளர் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

நோயாளிகள் தங்கள் வேதனைகள், வாழ்வு மற்றும் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவுக்குச் சான்று பகருமாறு அதில் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

2011ம் ஆண்டு ஆகஸ்டில் மத்ரித்தில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் இவ்வேளையில், இளையோருக்கு, குறிப்பாக நோயின் வேதனையை அனுபவிக்கும் இளையோருக்குத் தனது சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை.

திருநற்கருணையில் இயேசுவைப் பார்க்கவும் சந்திக்கவும் கற்றுக் கொள்ளுமாறும், நோயாளிகள், ஏழைகள், துன்புறும் சகோதரர்கள், தேவையில் இருப்போர் ஆகியோருக்கு உதவுமாறும் இளையோரைக் கேட்டுள்ளார் திருத்தந்தை.

சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து கடவுளன்பின் உன்னத வெளிப்பாடாக இருக்கிறார், இந்தக் காயப்பட்ட இயேசுவின் திருஇதயத்தைத் தியானிக்கவும், அவரிடமிருந்து நிறையன்பையும் விசுவாசத்தையும் வேதனையைத் தாங்கக்கூடிய சக்தியையும் நோயாளிகள் பெறுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடுகளில் துன்புறுவோருக்குக் குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவியும் ஆதரவும் வழங்கும் நலவாழ்வு வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கு அதிக முதலீடுகள் செய்யப்படுமாறு அரசு அதிகாரிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளார் திருத்தந்தை.



“அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்” (1பேது.2,24) என்ற புனித பேதுருவின் திருச்சொற்கள் திருத்தந்தையின் இச்செய்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது. இச்செய்தி இச்சனிக்கிழமை வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.