2010-12-16 15:16:20

'சமய சுதந்திரம், அமைதிக்கான பாதை' - திருத்தந்தை


டிச.16,2010. சமய சுதந்திரமே அமைதியின் உண்மையான கருவி, இதற்கு வரலாறும் இறைவாக்குப் பணியும் ஆதாரங்களாக இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வருகிற ஜனவரி முதல் தேதி கத்தோலிக்கத் திருச்சபையில் சிறப்பிக்கப்படும் 44வது உலக அமைதி தினத்திற்கென வெளியிட்ட தனது செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
'சமய சுதந்திரம், அமைதிக்கான பாதை' என்ற தலைப்பிலானத் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இவ்வுலகத் தினத்திற்கான இச்செய்தியைத் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் தலைமையிலான குழு இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.
உலகை மாற்றவும் அதை இன்னும் நல்லதொரு நிலைக்குக் கொண்டு வரவும் தேவையான பண்புகளையும் சக்தியையும் அமைதி கொண்டுவரும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
கடும் அநீதி, பொருளாதார மற்றும் அறநெறி வறுமையின் மத்தியிலும் இது நீதியும் அமைதியும் நிறைந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கையைத் தருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாக்தாத் நமது மீட்பர் பேராலயத்தில் அண்மையில் நடந்த வன்முறைத் தாக்குதலை இச்செய்தியின் துவக்கத்திலே குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சமய சுதந்திரம் மறுக்கப்படும் பொழுது என்ன நடக்கும் என்பதற்கு இது தெளிவான எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
சமய தீவிரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் வன்மையாய்க் கண்டிக்கும் அதேவேளை, பொது மற்றும் அரசியல் வாழ்வில் காட்டப்படும் மதத்தின் மீதான காழ்ப்புணர்வும் உலகாயுதப் போக்கும் ஆபத்து நிறைந்த அச்சுறுத்தல்களாக இருக்கின்றன என்றும் திருத்தந்தை அச்செய்தியில் எச்சரித்துள்ளார்.
சமய சுதந்திரமே நன்னெறி சுதந்திரத்தின் தொடக்கம் என்றும் இந்த சமய சுதந்திரம் மத நம்பிக்கையாளர்களின் சொத்து அல்ல, மாறாக இது இவ்வுலகினர் அனைவரின் பாரம்பரியச் சொத்து என்றும் அவர் கூறினார்.
ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்குப் பகுதி, குறிப்பாக புனித பூமி ஆகிய பகுதிகளில் பாகுபாடுகளையும் மதசகிப்பற்றதன்மையையும் வன்முறையையும் எதிர்கொள்ளஉம் கிறிஸ்தவச் சமூகங்களுடன் தனது தந்தைக்குரிய பாசத்தையும் செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
உலகில் எல்லாரும் சுதந்தரமாகத் தங்கள் மதங்களைப் பின்பற்றுவதற்கான உலகைச் சமைப்பதற்கு நன்மனம் கொண்ட எல்லாரும் தங்களது அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறும் தனது செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.