2010-12-16 15:17:33

குடியேற்றதாரர் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் கவலை


டிச.16, 2010. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடியேற வந்த 300 பேரை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பியுள்ளது குறித்து ஆஸ்திரேலிய ஆயர் பேரவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் Canberra மாநில அரசும், காபூலும் கையொப்பமிடவிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் பேரில் Hazara குலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பப்பட உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் Hazara குலத்தவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பதை அறியாமலேயே ஆஸ்திரேலிய அரசு இந்த முடிவெடுத்திருப்பது அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவின் பிரதிநிதி ஆயர் Joe Grech கூறினார்.
பிற நாடுகளில் குடியேற விழைவோர் பலரைத் தாங்கிச் சென்ற ஒரு படகு இப்புதனன்று கிறிஸ்மஸ் தீவு எனுமிடத்தில் கடலில் மூழ்கியதென்றும், அப்படகில் இருந்தோரில் 40 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.இந்தச் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி பேசிய ஆயர் Grech, வேறு நாடுகளில் குடியேறுவோரின் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை என்றும், இவற்றை மனிதாபிமான அடிப்படையில் நோக்குவது சிறந்தது என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.