2010-12-16 15:16:31

எல்லா மனிதரும் மாண்புடன் வாழ்வதற்கு அவர்கள் மதிக்கப்பட வேண்டும் - திருத்தந்தை


டிச.16,2010. நேபாளத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நற்பணியாற்றி வரும், குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு அமைப்புகள் மூலம் உயிர்த்துடிப்புடன் பணியாற்றி வரும் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
திருப்பீடத்துக்கான நேபாளத்தின் புதிய தூதர் Suresh Prasad Pradhan டமிருந்து இவ்வியாழனன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, நேபாளத்தில் அண்மை ஆண்டுகளில் கத்தோலிக்கருக்கு எதிராக இடம் பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் பேசினார்.
பத்து இலட்சத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் வாழும் நேபாளத்தில் கத்தோலிக்கர் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் சுட்டிக் காட்டி, திருச்சபை தனது காரித்தாஸ் மற்றும்பிற பிறரன்பு அமைப்புகள் மூலம் நாட்டினர் அனைவரின் நல்வாழ்வுக்குக் குறிப்பாக ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் நற்பணியாற்ற முயற்சித்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
நேபாள நாட்டின் ஜனநாயகத்தை நோக்கிய தற்போதைய நடவடிக்கைகளையும் திருத்தந்தை பாராட்டினார்.
மேலும், இதே நாளில், திருப்பீடத்துக்கான ஜாம்பியா, அந்தோரா, சேய்ஷெலெஸ், மாலி ஆகிய நாடுகளின் புதிய தூதர்களை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை சகோதரத்துவ தோழமை குறித்துப் பேசினார்.எல்லா மனிதரும் மாண்புடன் வாழ்வதற்கு அவர்கள் மதிப்புள்ளவர்களாய் நடத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்று திருத்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.