2010-12-16 15:17:03

உலகின் அமைதி எருசலேமிலிருந்து ஆரம்பமாகட்டும் - கர்தினால் பீட்டர் டர்க்சன்


டிச.16, 2010. உலகின் அமைதி எருசலேமிலிருந்து ஆரம்பமாகட்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், புனித பூமியில் அமைதி நிலவ அனைத்துநாடுகளின் வேண்டுதல் நாளையொட்டி அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல கத்தோலிக்க இளையோர் அமைப்புக்களின் முயற்சியால் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேண்டுதல் நாள், மூன்றாம் முறையாக வருகிற சனவரி மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் உலகின் பல நகரங்களிலும் மேற்கொள்ளப்படும்.
2009ம் ஆண்டு ஜனவரியில் இம்முயற்சி முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டபோது, உலகின் பல நாடுகளின் 500 பெருநகரங்கள் புனித பூமியின் அமைதிக்கான செபத்தில் இணைந்தன. 2010ம் ஆண்டு ஜனவரியில் 1103 பெருநகரங்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும், எருசலேமின் லத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal, புனித பூமியின் கண்காணிப்பாளரான அருள்தந்தை Pierbattista Pizzaballa ஆகியோருடன் செபத்தில் இணைந்தனர்.
2011 ஜனவரியில் இந்த உலகளாவிய செபத்தில் இணைவதற்கு 2000 க்கும் மேற்பட்ட பெருநகரங்கள் முன்வந்துள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.திருச்சபை என்றும் அமைதிக்காகப் பாடுபட்டு வந்துள்ளதென்பதற்கு இந்தச் செப முயற்சியும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறிய கர்தினால் டர்க்சன், அன்பின் அடிப்படையில் உருவாகும் கலாச்சாரத்தில் இளையோர் வளர்வதையே திருச்சபை வலியுறுத்துகிறதென்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.