2010-12-16 15:16:46

அகில உலக லூத்தரன் கூட்டமைப்பினர் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.16, 2010. கத்தோலிக்கத் திருச்சபைக்கும், லூத்தரன் சபைகளுக்கும் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உரையாடல்கள் பலன்களை அளிப்பதைக் காண முடிகிறதென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அகில உலக லூத்தரன் கூட்டமைப்பின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயர் Munib Younan மற்றும் சில அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் இவ்வியாழன் மதியம் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பின் போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற துவக்கத்தில் லூத்தரன் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்களைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.
மீட்பு பெறுவது குறித்து கத்தோலிக்கத் திருச்சபைக்கும், பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே உருவான கருத்தொருமித்த படிப்பினை ஒன்று இணையாக வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு கடந்த ஆண்டு என்பதை தன் உரையில் நினைவு கூர்ந்த திருத்தந்தை, இது போன்ற தொடர்ந்த உரையாடல்கள் கத்தோலிக்கத் திருச்சபையையும், பிற கிறிஸ்தவ சபைகளையும் இணைக்கும் என்பதைத் தான் நம்புவதாகக் கூறினார்.கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபைகளுக்கும் இடையே கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் அதிகமாக உருவாகவும், அனைவரும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு இவ்வுலகில் தகுந்த சாட்சிகளாக மாறவும் தன் விருப்பத்தையும், செபங்களையும் திருத்தந்தை இவ்வுரையில் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.