2010-12-15 16:02:58

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


டிச 15, 2010. உரோம் நகரம் குளிர் காலத்தில் இருந்தாலும் இவ்வாரம் சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாகமாகவே இருந்து வருகிறது. வானம் மிகப் பிரகாசமாக இருந்தாலும் குளிர்ந்த காற்றின் தாக்கமும் உணரும்படியாக உள்ளது. இத்தகைய ஒரு காலநிலையில் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் திருத்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

350 ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில் பிறந்த தியானயோகியும் ஏழை கிளாரா கப்புச்சின் சபையைச் சேர்ந்தவருமாகிய புனித வெரோனிக்கா ஜூலியானி குறித்து இன்றைய நம் மறைக்கல்வி போதகத்தில் நோக்குவோம் என தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

தன் பெயருக்கு ஏற்றாற்போல் புனித வெரோனிக்கா, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உண்மைச் சாயலாகவே மாறி, ஐந்து புனித காயங்கள் மற்றும் முள்முடி சூடல் போன்ற ஆழமான தியானயோக அனுபவங்கள் வழி ஆண்டவரோடு இணைந்து வழிநடந்தாள். புனித வெரோனிக்கா எழுதி வைத்த குறிப்புக்களில் காணப்படுவதுபோல், அவரின் ஆன்மீகமானது கிறிஸ்துவை மையம் கொண்டதாகவும் ஒரு மணவாட்டியின் செயற்பாடுகளாகவும் இருந்தது. இயேசுவின் சிலுவைப்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட அவரின் அன்பின் ஒளியில் அனைத்தையும் நோக்கிய புனித வெரோனிக்கா, ஆன்மாக்களின் மீட்புக்காகத் தன்னையே முற்றிலுமாக கையளித்த இயேசுவின் அன்பில் தன்னை ஐக்கியப்படுத்தினார். திருவிவிலியம் மீதான புனித வெரோனிக்காவின் அன்பானது, திருச்சபை மீதான அவரின் அன்பிலும் புனிதர்களின் ஐக்கியம் குறித்த அவரின் ஆழமான அறிவிலும் நெருக்கமான முறையில் இணைந்திருந்தது. வெரோனிக்காவின் தியானயோக அனுபவங்களை, அவர் தன் மரணத்தறுவாயில் கூறிய 'நான் அன்பைக் கண்டுகொண்டேன்' என்ற வார்த்தைகளைக் கொண்டே சுருக்கமாகக் கூறிவிடலாம். இயேசுவோடும் திருச்சபையோடுமான ஐக்கியத்தில் நாம் வளரவும், பாவிகளின் மீட்புக்கான இயேசுவின் அன்பு நிறை அக்கறையில் நாம் பங்கெடுக்கவும், புனித வெரோனிக்காவின் வாழ்வும் போதனைகளும் நம்மைத் தூண்டுவதாக.

இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.