2010-12-14 15:46:23

டிசம்பர் 15 நாளுமொரு நல்லெண்ணம்


1955ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஓர் உலகக்கடிகாரம் இயங்கத் துவங்கியது. இதை வடிவமைத்த Jen Olsen என்பவர் இந்த நிகழ்வைக் காண முடியாமல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தார். டென்மார்க் நாட்டில் Copenhagen மாநகர அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த அரிய கடிகாரம் 14,000 க்கும் மேற்பட்ட சிறு சிறு பாகங்களைக் கொண்டு மிக, மிக நுணுக்கமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள வெவ்வேறு சக்கரங்களின் சுழற்சியால் இந்த கடிகாரம் வான்வெளியின் நிகழ்வுகளையும் துல்லியமாகக் காட்டும் திறமை பெற்றது. இதன் ஒரு சக்கரம் 10 நொடிக்கு ஒரு முறை சுற்றி வரும் வேகத்தில் இயங்குகிறது. வேறொரு சக்கரம் ஒரு முறை சுற்றி வர 25,753 வருடங்கள் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.உலகக் கடிகாரத்தில் பல்வேறு கால அளவுகளுடன் சுற்றி வரும் சக்கரங்கள் போல், விண்வெளியில் கோளங்கள் சுற்றி வருகின்றன. நமது பூமியைச் சுற்றும் நிலவு தன் பாதையில் ஒருமுறை சுற்றி வர 29.5 நாட்கள் ஆகின்றன. ஒரு சில கோள்கள் தங்கள் பாதையை முடிக்க பல கோடி ஆண்டுகள் ஆகின்றன. உலகக்கடிகாரத்தை உருவாக்கிய Jen Olsen அந்தக் கடிகாரம் இயங்க ஆரம்பிக்கும் முன் இவ்வுலகினின்று விடைபெற்றார்; ஆனால், வரலாற்றில் வாழ்கிறார். பிரபஞ்சம் அனைத்தையும் துல்லியமான திட்டத்துடன் இயக்கி வரும் இறைவன் நம் வரலாற்றில் வாழ்கிறாரா?







All the contents on this site are copyrighted ©.