2010-12-14 15:06:24

ஈராக்கில் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஆலயங்களைச் சுற்றித் தடுப்புச் சுவர்கள்


டிச.14,2010. ஈராக்கின் பாக்தாத் மற்றும் மொசூல் நகர ஆலயங்களுக்குக் கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்லும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் அவ்வாலயங்களைச் சுற்றிப் பத்து அடி உயரத்துக்குக் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டு வருவதாக செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கிறிஸ்துமஸ் பெருவிழா அண்மித்து வருவதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் கிறிஸ்தவச் சமூகங்களுக்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் ஈராக் அரசு பாதுகாப்புச் சுவர்கள் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது என்று அச்செய்தி கூறுகிறது.

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை குறித்து, Aid to the Church in Need என்ற ஜெர்மன் பிறரன்பு நிறுவனத்திற்குப் பேட்டியளித்த எர்பில் பேராயர் பாஷர் வார்தா, ஈராக்கில் என்னதான் நடந்தாலும் கிறிஸ்துமஸ் திருவழிப்பாட்டை நடத்துவதில் மக்கள் உறுதியாய் இருக்கிறார்கள் என்றார்.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தடுப்புச் சுவர்களும் இராணுவ முகாமுக்குள் நுழைவது போன்ற உணர்வையே கிறிஸ்தவர்களுக்கு ஏற்படுத்தும் என்றுரைத்த பேராயர் வார்தா, ஈராக்கில் எல்லா இடங்களிலும் சோகமும் நிச்சயமற்றதன்மையும் காணப்படுகின்றது என்றும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.