2010-12-14 15:05:33

ஈராக் அரசு குடிமக்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை வலியுறுத்தல்


டிச.14,2010. தங்களையே காத்துக் கொள்ள முடியாமலும், அதேநேரம் நேர்மையாகவும் அமைதியாகவும் வாழ விரும்பும் ஈராக் குடிமக்களின், குறிப்பாகக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு அரசு உறுதி வழங்குமாறு அந்நாட்டு சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை இக்னேஷியுஸ் ஜோசப் யூனன் வலியுறுத்தினார்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் நினைவாக "46 புதிய மறைசாட்சிகள்" என்ற நாள் இம்மாதம் பத்தாம் தேதி கடைபிடிக்கப்பட்ட போது இவ்வாறு கூறினார் முதுபெரும் தந்தை யூனன். அன்றைய நாளில் பாக்தாத் சிரிய கத்தோலிக்க ஆலயத்தில் இவர் நிகழ்த்திய திருப்பலியில் அரசு அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.

கிறிஸ்தவர்கள் மீதானத் தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி செய்வோர் மீது பாரபட்சமற்ற விரிவான விசாரணைகளை நடத்துவது அரசின் கடமை என்பதையும் தனது மறையுரையில் சுட்டிக் காட்டினார் முதுபெரும் தந்தை யூனன்.

ஈராக் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் பணியிடங்களிலும் பாதுகாப்பை உணரும்விதத்தில், அரசு அதிகாரிகள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமல்ல, அவற்றைச் செயலில் காட்ட வேண்டுமென்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.