2010-12-13 16:07:37

பெத்லகேமில் அமைதி நிலவ அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செபவழிபாடு


டிச.13, 2010. அமைதியின் இளவரசராய் இவ்வுலகில் கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் அமைதி நிலவும் படி அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செபவழிபாடு, வருகிற சனிக்கிழமையன்று அமெரிக்காவின் வாஷிங்க்டன் DC யில் உள்ள தேசியப் பேராலயத்தில் நடைபெற உள்ளது.

வாஷிங்க்டன் DC பகுதியில் வாழ்பவர்கள் இச்செபவழிபாட்டில் கலந்து கொள்ளும் அதே வேளையில், http://www.NationalCathedral.org என்ற இணையதளத்தின் மூலம் காட்டப்படும் நேரடி ஒளிபரப்பின் வழியாகக் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல தலைமுறைகளாக, பெத்லகேமில் பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் பல்வேறு பிரச்சனைகள் மத்தியிலும் தங்கள் மதத்திற்குச் சான்று பகர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களோடு உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் செபத்தில் இணைவதே இந்த செப வழிபாட்டின் நோக்கம் என்று இந்த வழிபாட்டை ஏற்பாடு செய்துள்ளவர்கள் கூறினர்.

மத்திய கிழக்குப் பகுதி அமைதிக்கான சபைகள் என்று 1984ம் ஆண்டு கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள் என 24 சபைகள் கூடி நிறுவிய ஒரு அமைப்பு, இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும் என்று பல்வேறு செப முயற்சிகளை மேற்கொள்கின்றன. மேலும், இந்த அமைப்பு அப்பகுதியின் அமைதிக்கான முயற்சிகளில் அமெரிக்க அரசை பல வழிகளிலும் தூண்டி வருகிறதென செய்திக் குறிப்பு கூறுகிறது.

பெத்லகேம் அமைதிக்கான அனைத்து கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த செப வழிபாடு டிசம்பர் 18, வருகிற சனிக்கிழமை காலை 9.30 முதல் 10 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.