2010-12-13 14:50:07

டிசம்பர் 14 நாளும் ஒரு நல்லெண்ணம்


அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்தி 23 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த 71 வயது பெர்னார்ட் மேடாஃப் என்பவர், 2008ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பணமோசடியை நிகழ்த்திய மேடாஃப் தற்போது 150 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அனுபவித்து வருகிறார். தந்தை கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து அதே நாளில் அதாவது இச்சனிக்கிழமை (டிசம்பர் 11,2010) அவரது 46 வயது மகன் மார்க் மேடாஃப் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மார்க் நியூயார்க்கிலுள்ள தனது வீட்டில் நாயைக் கட்டப் பயன்படுத்தப்படும் கயிற்றால் தூக்கிலிட்டுக் கொண்டார். மார்க்கின் இரண்டு வயது மகன் அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனைகளையும் அவமானங்களையும் எதிர்நோக்கினார் என்று செய்தி வெளியாகியுள்ளது. தந்தை செய்த மோசடியால் ஏற்பட்ட தொடர் அவமானங்கள், தந்தையிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் பணம் கேட்டு நச்சரித்தது மார்க் தற்கொலை செய்யக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

சிந்தனைக்கு:குறுகிய ஆதாயங்களுக்காக உயரிய கோட்பாடுகளைச் சிதைக்கக் கூடாது.

எப்பொருளை அடிமைப்படுத்தினாலும் எப்பொருளுக்கு அடிமையானாலும் அதனால் வருவது துன்பங்களே.







All the contents on this site are copyrighted ©.