2010-12-13 16:01:52

கிறிஸ்துவின் வருகைக்கானத் தயாரிப்பில் பொறுமை காக்கத் திருத்தந்தை அழைப்பு


டிச.13, 2010. மனிதன் பொறுமை என்னும் புண்ணியப் பண்பில் உறுதிப்பட திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கின்றது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் உட்பட அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு இரண்டாவது வாசகத்தை மையமாக வைத்துப் "பொறுமையின்" முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

இச்சிறார், தங்கள் வீட்டுக் குடில்களில் வைக்கும் பாலன் இயேசு திருவுருவத்தைத் திருத்தந்தை மந்திரிப்பதற்காக அவற்றைக் கொண்டு வந்திருந்தனர். இக்குழந்தை இயேசுவை அவர்கள் குடில்களில் வைக்கும் போது தனக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

பொறுமை எனும் இப்பண்பு இன்றைய உலகுக்கு மிகவும் அவசியம் என்ற திருத்தந்தை, நமது அகவாழ்வில் சோர்வடையாமல் உறுதியுடன் வாழத் திருவருகைக்காலம் அழைப்பு விடுக்கின்றது என்றார்.

எல்லாம் கடந்து போகும், எல்லாம் மாறிப் போகும். ஆனால் இறைவார்த்தை மட்டும் மாறாதது என்பதால் மனிதனின் இதயத்தை உறுதிப்படுத்துவதில் திருமறைநூல் தவறுவதில்லை என்றும் திருத்தந்தை உறுதிபடக் கூறினார்







All the contents on this site are copyrighted ©.