2010-12-11 15:23:42

டிசம்பர் 12, நாளுமொரு நல்லெண்ணம்


இயேசுவின் தாயான மரியா, கன்னியாகவும் அன்னையாகவும் உலகின் பல நாடுகளில் தோன்றியதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. மரியாவின் காட்சிகள் பெரும்பாலும் எளிய மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இறைவன் காட்டும் அடையாளங்களை எளிய உள்ளங்கள் எளிதில் கண்டுகொள்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1531ம் ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 12ம் தேதிகளில் மெக்சிகோ நாட்டில் குவாதலூப்பே அன்னை (Our Lady of Guadalupe) என்றழைக்கப்படும் மரியாவின் உருவம் ஓர் ஏழை விவசாயி அணிந்திருந்த மேலாடையில் பதிந்ததாகச் சொல்லப்படுகிறது.
மலர்கள் பூக்கமுடியாத குளிர் காலத்தில், அன்னை மரியாவின் வார்த்தைகளைக் கேட்டு, இந்த விவசாயி ஒரு குறிப்பிட்ட மலையுச்சிக்குச் சென்றார். அங்கு அதிசயமாகப் பூத்துக் கிடந்த பல வகை மலர்களைத் தன் மேலாடையில் சுற்றிக் கொணர்ந்து, அப்பகுதியின் ஆயரிடம் காட்டினார். அந்த நேரத்தில் அந்த மேலாடையில் மரியன்னையின் உருவமும் ஒளிர்ந்தது. இதுவே குவாதலூப்பே அன்னை மரியாவின் அற்புதம் என்று வழங்கப்படுகிறது.
அன்னையரின் விருப்பத்திற்கிணங்க, இயற்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதென நமது பாரம்பரியக் கதைகள் சொல்கின்றன. அன்னையருக்கெல்லாம் வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக உள்ள அன்னை மரியா விரும்பினால், உறைந்த பனியின் நடுவிலும் உயிர்கள் பூக்கும்; நெருப்பின் நடுவிலும் நீரூற்று பெருகும்.
 டிசம்பர் 12ம் தேதி குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.