2010-12-11 14:39:09

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறைந்து வருவதைவிட அதிகரித்தே வருகின்றன - GCIC


டிச.11,2010. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறைந்து வருவதைவிட அதிகரித்தே வருகின்றன என்று GCIC என்ற இந்தியக் கிறிஸ்தவர்களின் உலகளாவிய அவை குறை கூறியது

உலக மனித உரிமைகள் தினமான இவ்வெள்ளியன்று இவ்வாறு உரைத்த அகமதபாத் இயேசு சபை மனித உரிமைகள் மைய இயக்குனர் அருள்தந்தை சேத்ரிக் பிரகாஷ், ஆயிரக்கணக்கானப் பூர்வீக இன மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களையும் காடுகளையும் கொண்டிருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்று குறை கூறினார்.

மேலும், இந்த மனித உரிமைகள் நாளில் பேசிய, இந்த உலக அவையின் தலைவர் சாஷன் ஜார்ஜ், இந்தியாவில் சிறுபான்மைக் கிறிஸ்தவச் சமுதாயத்தின் மீதான அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்துப் பேசினார்.

ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசு அதிகாரிகள் தாமதம் செய்து வருவதையும், அங்கு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அருட்சகோதரி நடத்தப்படும் விதத்தையும் ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

மங்களூர் மற்றும் உடுப்பியில் 2008ம் ஆண்டிலிருந்து 133 தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.