2010-12-10 15:27:32

சிலே நாட்டுச் சிறைகள் தொடர்பாக ஆயர்கள் உரையாடலுக்கு அழைப்பு


டிச.10,2010: சிலே நாட்டுச் சிறைகள் எதிர்கொள்ளும் கடும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு உயர்மட்ட அளவிலான உரையாடல் குழு உடனடியாக உருவாக்கப்படுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் மீண்டும் பரிந்துரை செய்துள்ளனர்.
சிலே நாட்டு சான் மிகுவேல் சிறையில் இப்புதனன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 81 கைதிகள் பலியாயினர் மற்றும் பலர் காயமடைந்ததை முன்னிட்டு அந்நாட்டு ஆயர்கள் இத்தகைய அழைப்பை அரசுக்கு முன்வைத்துள்ளனர்.
சிலே ஆயர்கள் வெளியிட்ட இவ்வழைப்பை உள்ளடக்கிய அறிக்கையை, ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ricardo Ezzati Andrello, அமலமரி விழாவான இப்புதனன்று ஆயிரக்கணக்கான விசுவாசிகள் முன்னிலையில் வாசித்தார்.
சிலே நாட்டின் 200வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு ஆயர்கள் கடந்த ஜூலையில் கைதிகளுக்கான மன்னிப்புக்கு அழைப்பு விடுத்த போது, நாட்டின் சிறைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னதாக அவ்வறிககையில் கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஏறக்குறைய 70 விழுக்காட்டு சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை கொள்ளவைவிட மிக அதிகமாக இருக்கின்றது. நூறு கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 170 பேர் அடைக்கப்பட்டிருப்பதாக சிலே நீதி அமைச்சர் Felipe Bulnes கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.சாண்டியாகோ நகர மத்திய சிறையில், ஆயிரத்து 960 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இப்புதன் காலை சிறையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ, கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு பரவியது. அறைகள் பூட்டப்பட்டிருந்ததால் உடனடியாக தப்பிக்க முடியாத கைதிகள் குறைந்தது 81 பேர், உடல் கருகி பலியாயினர்; 14 பேர் படுகாயமடைந்தனர். 200 பேரை மட்டும் காவல்துறை காப்பாற்றியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.