இந்தோனேசியாவில் காணப்படும் ஊழல்கள் குறித்து பல்சமயத் தலைவர்கள் கவலை
டிச.09, 2010. இந்தோனேசியாவில் பரவலாகக் காணப்படும் ஊழல்கள் குறித்து அந்நாட்டின் பல்சமயத்
தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9ம் தேதி கடைபிடிக்கப்படும்
அகில உலக ஊழல் ஒழிப்பு நாளையொட்டி, இப்புதனன்று Jakartaவில் 200க்கும் அதிகமான மதத்தலைவர்கள்,
சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கூடி வந்திருந்த ஒரு கூட்டத்தில் இக்கருத்து வெளியிடப்பட்டது. இந்தோனேசியா
ஊழலில் அதிகரித்து வருவதைக் குறித்து தொடர்பு சாதனங்கள் வழியே கூறுவது மட்டும் இந்தப்
பிரச்சனையைத் தீர்க்காது; மாறாக, அனைத்துத் துறைகளின் தலைவர்களும் இந்தப் பிரச்சனைகளைத்
தகுந்த நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இப்பிரச்சனையைத் தீர்க்கும் வழி என்று
Padang மறைமாவட்டத்தின் ஆயர் Marinus Dogma Situmorang கூறினார். ஊழல் பிரச்சனைக்குத்
தகுந்த தீர்வுகளைக் காண சமயத் தலைவர்கள் முயற்சிகள் செய்யாத போது, இறைவாக்கு உரைக்கும்
அவர்களது பணி வலுவிழந்து போகிறது என்று ஆயர் Situmorang மேலும் கூறினார். ஊழலை ஒழிப்பதற்கு
நாட்டின் சட்டங்கள் சக்தியில்லாமல் இருப்பதே இந்த குறை வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம்
என்று இஸ்லாமியத் தலைவர் Din Syamsuddin கூறினார். இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஊழலுக்கு
எதிராக அரசு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளைத் தீர்மானங்களாக வகுத்து, அவற்றை அரசுத்
தலைவர் Susilo Bambang Yudhoyonoவிடம் சமயத் தலைவர்கள் சமர்ப்பித்தனர்.ஊழல் நிறைந்த நாடுகள்
குறித்து 178 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தோனேசியா மிகவும் தாழ்ந்த
110ம் நிலையில் உள்ளது.