2010-12-09 15:19:01

அணுஆயுத குறைப்பு பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் வலியுறுத்தல்


டிச.09, 2010. அணுஆயுதக் குறைப்பு பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளு மன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதங்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு வர வேண்டுமென்று அந்நாட்டின் ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, மற்றும் இரஷ்ய அரசுத்தலைவர் Dmitri Medvedev இருவரும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திட்ட ஓர் ஒப்பந்தத்தில் உலகின் அரசுகள் ஒவ்வொன்றும் அணுஆயுதங்களை 10 விழுக்காடாவது குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசின் சட்டமாக மாறுவதற்கு அங்குள்ள பாராளு மன்றம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்கியதில் முன்னோடியாக இருந்த அமெரிக்க அரசும், இரஷ்ய அரசும் தற்போது அவ்வாயுதங்களைக் குறைப்பதற்கும் முன்னோடியாக இருப்பது நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும் அமைதி பணிக் குழுவின் தலைவரான ஆயர் Howard Hubbard கூறினார்.
திருத்தந்தை 12ம் பத்திநாதரின் கூற்றுகள், மற்றும் இரண்டாம் வத்திக்கான் திரு அவையின் கூற்றுகள் உட்பட, அணு ஆயுதங்கள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே திருச்சபை தன் கண்டங்களையும் அக்கறையையும் தெரிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
1970களில் புகழ் பெற்ற தொலைக்காட்சி பேச்சாளரும் தற்போது முத்திபேறு பெற்ற நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவருமான பேராயர் Fulton Sheen, அமெரிக்க அரசு 1945ல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது குறித்து பேசுகையில், கட்டுக்கடங்காமல் செல்லும் அமெரிக்க அரசின் போக்கினைக் குறித்து தன் உரைகளில் கேள்விகள் எழுப்பினார்.பேராயர் Fulton Sheen 1979ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி மறைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.