2010-12-08 15:51:59

உயிர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு குறைந்து வருவது திருச்சபையின் சமுதாயப் படிப்பினைகளுக்குப் பெரியதொரு சவால் - திருப்பீட அதிகாரி


டிச.08, 2010. கருக்கலைப்பு முதல் கருணைக்கொலை வரை உலகில் உயிர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு குறைந்து வருகிறதென்றும், திருச்சபையின் சமுதாயப் படிப்பினைகளுக்கு இந்தப் போக்கு பெரிதும் சவாலாக அமைந்துள்ளதென்றும் திருப்பீட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“உயிர்களின் பாதுகாப்பும் மக்களின் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் உரோமையிலுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றுகையில், வத்திக்கான் நலவாழ்வு பணிக்குழுவின் தலைவரான பேராயர் Zygmunt Zimowski இவ்வாறு கூறினார்.
உயிர்களை மதிப்பதென்ற நன்னெறி கோட்பாடு இக்காலத்தில் ஓர் அரசியல் கோட்பாடாக மாற்றப்பட்டு, பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படுவதால், அந்த நன்னெறியின் அடிப்படையான தனிமனித மதிப்பு முன்னிறுத்தப்படுவதில்லை என்று பேராயர் தன் உரையில் கூறினார்.
ஒரு சில நாடுகளில் மனசாட்சியின் குரலுக்கும், மத கோட்பாடுகளுக்கும் செவி சாய்க்காமல், மக்களிடையே பரவலாக நிலவும் கருத்துக்களின் அடிப்படையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பேராயர் தன் உரையில் வருத்தம் தெரிவித்தார்.ஒவ்வோர் ஆண்டும் உலகில் 4 கோடியே 60 இலட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகிறதென்று பேராயர் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.