2010-12-08 15:53:03

Facebook போன்ற இணையதள வசதிகளின் பாதிப்பினால் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களின் கவலை


டிச.08, 2010. Facebook போன்ற இணையதள வசதிகள், மற்றும் செல்லிடப் பேசிகளின் SMS வசதிகள் வழியாக முன்பின் தெரியாதவர்களுடன் பெருகி வரும் உறவுகளால் பாலியல் செயல்பாடுகள், மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள டீன் ஏஜ் இளையோரிடையே பெருகி வருவதைக் குறித்து அந்நாட்டு கத்தோலிக்கர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் போக்கினைக் கட்டுப்படுத்துவதில் பெற்றோருக்கே முதன்மையான கடமை உண்டென்றும் அக்கடமையைப் பெற்றோர் சரிவரச் செய்வதில்லை என்றும் அமெரிக்காவின் பல பங்கு தந்தையர்களும், இளையோர் அமைப்புக்களும் கூறியுள்ளன.
ஒரு சராசரி பள்ளி நாளின் போது ஒவ்வொரு டீன் ஏஜ் இளையோரும் குறைந்தது 120 செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றனர் என்றும், ஒவ்வொரு நாளும் இவர்கள் இந்தத் தொடர்புகளில் சராசரி மூன்று மணி நேரங்கள் செலவு செய்கின்றனர் என்றும் நவம்பர் மாதத்தில் வெளியான Business Week என்ற வார இதழின் ஆய்வறிக்கை இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தது.
இந்தத் தொடர்புகளில் பல மணி நேரங்களை செலவிடுவதால், தங்களது படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும், இந்த தொடர்புகள் பொதுவாக இரவு நேரங்களில் அதிகம் மேற்கொள்ளப்படுவதால், தங்கள் உறங்கும் நேரமும், அதனால் தங்கள் நலமும் பாதிக்க்ப்படுகின்றதென்றும் இளையோர் கருத்துக்கள் கூறியுள்ளனர்.முகமுகமாய் நாம் கொள்ளும் உறவுகளே நம்மை வளர்க்கக்கூடியவை என்றும், குடும்பங்களில் இந்த உறவுகள் அதிகம் குறைந்து வருவதால், இளையோர் இந்த கற்பனை உறவுகளில் தங்கள் நாட்களைச் செலவிடுகின்றனர் என்றும் Denver தூய ஆவியாரின் பங்கு தந்தை அருள்திரு மைக்கிள் வாரன் (Michael Warren) கூறினார்.







All the contents on this site are copyrighted ©.