2010-12-06 15:14:22

“தர்மங்களைத் தளைக்கச் செய்வோம்”


டிச.06,2010. டிசம்பர் 6 என்றாலே இந்தியாவில் சாதாரண மனிதனையும் தற்போது பயம் பற்றிக் கொள்கிறது. இந்நாளையொட்டி எல்லா இடங்களிலும் போடப்படும் பலத்த பாதுகாப்பு இந்தப் பயத்தை அதிகரிக்கின்றது. இத்திங்களன்றுகூட தமிழகத்தில் பத்தாயிரம் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்றுதான் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளைப் பயன்படுத்தி வெளிநாட்டுச் சக்திகள் உள்நாட்டில் பயங்கரவாதங்களை அரங்கேற்றவும் முயற்சிக்கின்றன. இவற்றைத் தவிர்க்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாகி விட்டது. இப்பொழுதும் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படும் பைசலாபாத், லக்னோ, வாரணாசி, அலிகார், பரேலி, கோரக்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காவல்துறையுடன் இணைந்து, அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலைமை இப்படியென்றால்,

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சிங்கள இராணுவத்தினரால், தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட படுகொலை வீடியோப் படங்களைக் கடந்த சில நாட்களாக மீண்டும் இணையதளத்தில் காண முடிகின்றது. தமிழ்ப் போராளிகளின் இரண்டு கைகளையும் பின்புறமாகக் கட்டி நிர்வாணமாக அவர்களைச் சிங்களப் படைவீரர்கள் தள்ளிக் கொண்டு வந்து துப்பாக்கியால் சுடும் காட்சியையும் அவர்கள் அவற்றை அலைபேசியில் படம் எடுப்பதையும் “தமிழ்வின்” இணையதளத்தில் கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது. இதற்கிடையே, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, இந்தக் வீடியோக் காட்சிகள் எல்லாம் போலியானவை. இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளையேக் கொன்றனர். எந்த ஒரு குடிமகனையும் கொலை செய்யவில்லை என்று இலண்டன் டைம்ஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் என்று இஞ்ஞாயிறன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்க் குற்றம், மனிதநேயம், மனித உரிமை மீறல் என்று காலம் காலமாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்களே, இந்தக் கோரப் படுகொலைகளைப் பார்த்த பின்னர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியும் இப்போது ஆங்காங்கே எதிரொலிக்கின்றது. ஐக்கிய நாடுகள் நிறுவனமும் ஆண்டு தோறும் டிசம்பர் பத்தாம் தேதியை உலக மனித உரிமைகள் தினமாகவும், டிசம்பர் 9ம் தேதியை இலஞ்ச ஊழலுக்கு எதிரான உலக தினமாகவும் கடைபிடித்து வருகின்றது. ஆனால் நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்படவில்லை. இலஞ்ச ஊழலும் ஒழிக்கப்படவில்லை. இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றக் கூட்டத்தை முடக்கிப் போட்டுள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்தான் எல்லாருக்கும் தெரியுமே. நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கியதால் மத்திய அரசுக்கு 78 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி என்ற அமைப்பு அண்மையில் இந்தியா குறித்து நடத்திய ஆய்வின் முடிவுகள் கவலை தருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1948ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஊழல், வரி ஏய்ப்பு, இலஞ்சம் உள்ளிட்ட செயல்களால் நாட்டிற்கு 23 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தக் கறுப்புப்பணத்தில் சுமார் 72 விழுக்காடு வெளிநாடுகளில் கறுப்புப்பணமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிதிய வல்லுனர் தேவ்கர் இது குறித்து ஆய்வு செய்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவர் சொல்கிறார் – “இந்தியாவின் கறுப்புப்பணம் டெபாசிட் செய்யப்படுவது ஆண்டுக்கு 11.5 விழுக்காடு வளர்ந்து வந்திருக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் டெபாசிட் செய்த இந்தியப் பணம் 462 பில்லியன் டாலராகும். இந்தப் பணத்தின் மூலம் நாட்டில் வறுமைஒழிப்பு, மின்சாரம் இல்லாத கிராமங்களை மேம்படுத்துதல், தடுப்பூசி போடுதல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல் போன்றவற்றைச் செய்து முடிக்க முடியும்” என்று.

ஆனால் இன்று இந்தியாவில் ஏழ்மை, நோய் போன்றவற்றால் பலரது வாழ்வு கேள்விக் குறியாகவே இருக்கிறது. போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் ஏற்பட்டு கடந்த வியாழனோடு 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகள் கழித்தும், இதனால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குழந்தைகளும் மனநிலை பாதிப்பு, மூளைவளர்ச்சித்திறன் குறைவாக இருப்பது உள்ளிட்ட பல வகையானப் பாதிப்புக்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விஷவாயுக் கசிவுச் சம்பவத்தில் 15 ஆயிரம் பேர் இறந்தனர். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பலவிதமானப் பாதிப்புக்களுக்கு ஆளாகினர். இந்த நினைவு தினமான டிசம்பர் 2ம் தேதி இதில் இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல்தலைவர்கள் ஒரு நிமிடம் மௌனம் அனுசரித்தனர். இந்நினைவு நாளைக் கடைபிடித்தத் தன்னார்வ அமைப்புகள், அரசியல்வாதிகள் இந்நாளில் நீலக்கண்ணீர் வடிப்பதோடு சரி. உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று குறை சொல்கின்றன.

தமிழகத்தில் கடந்த முப்பது மாதங்களில் 3 ஆயிரத்து 222 பெண்கள் இறந்துள்ளனர். தற்கொலை மூலம் 2 ஆயிரத்து 182 பேரும், வரதட்சணை கொடுமையால் 197 பேரும் பலியாகி உள்ளனர். பெண்கள் சாவுப் பட்டியலில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 378 பெண்கள் இறந்துள்ளனர். இளம்பெண்கள் மரணம் குறித்து மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பு 25 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இடம் பெறும் உரிமை மீறல்களுக்கும் இலஞ்ச ஊழல்களுக்குமெனச் சில தகவல்களை எடுத்துச் சொன்னோம். இதேமாதிரியான நடவடிக்கைகளை எதிர்த்து உலகில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நாளொரு போராட்டம், வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் எனத் தவறாமல் இடம் பெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் குறை சொல்வதைக் கேட்பது நமக்கும் பழக்கமாகி விட்டது. எந்தக் கட்சி அரியணை ஏறினாலும் இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் மட்டும் தவறாமல் இடம் பெறுகின்றன. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அன்றாடங்காச்சி குடிமகன்தான். சுரண்டுபவர்கள் சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள், ஏழைகள் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். உரிமைகளை இழப்போர் மேலும் மேலும் அவற்றை இழந்து கொண்டே இருக்கிறார்கள். இருந்த போதிலும், பாதிக்கப்படுபவரே, தன்னைப் போன்று பாதிக்கப்படும் மனிதரைப் புரிந்து கொள்வதையும், அவர்களே அவர்களுக்கு உதவியாக இருப்பதையும் பார்ப்பது ஆறுதல் தருகின்றன.

அண்மையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், செல்வந்தர் - ஏழைகள் இவர்களின் குணங்கள் குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். பணக்காரர்களைவிட ஏழைகளே பிறரின் உணர்வுகளை அறிந்து கனிவுடன் அவர்களைப் பெருந்தன்மையாக நடத்துகின்றனர், பிறரை மதிக்கின்றனர், பிறரின் தேவைகளை அறிந்து கொள்வதில் கவனமாக இருக்கின்றனர், சக மனிதரை மதிக்கும் இந்தப் பழக்கம் சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவுகிறது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

"மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்குச் செய்வதற்கு சமம். தூய்மையான மனதால் இறைவனை அழைத்துப் பார்க்க முடியும் என்றார் இராமகிருஷ்ணர். டாக்டர் சுரேந்திரன் கல்லீரல் மாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்று நிரூபித்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் சொல்கிறார் - ''மிகச் சாமானியர்கள் என்று நாம் நினைக்கிறவர்கள் அபாரமான பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்''. ஒருமுறை, நரிக்குறவர் ஒருவரின் குழந்தை இறந்துபோனதாம். அவரிடம் உறுப்பு தானம் பற்றி இவர் பேசியபோது, ''தாராளமா எடுத்துக்கோ சாமி! மண்ணு சாப்புடற உடம்பு, மத்தவங்களுக்குப் பயன்படட்டும் சாமி! எங்க ஆளுங்க வந்தா கொஞ்சம் மரியாதையா நடந்துக்க சாமி... அது போதும்'' என்றாராம் அந்த நரிக்குறவர்.

ஆம். ஏழை எளியவர்கள் காட்டும் பெருந்தன்மை, 'நாம் தியாகம் செய்தோம்’ என்ற உணர்வுகூட இல்லாமல் அது முழுமையானதாக இருக்கும். அது பிறரைச் சில தருணங்களில் வியப்பில் ஆழ்த்தும். வெட்கப்படவும் வைக்கும். இதுவே உண்மையான கருணை! என்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு.

தன் வாழ்வின் பொருளையும் ஆன்மிகத்தின் சாரத்தையும் அறிவதற்கு வெகுகாலமாக ஆசைப்பட்ட மருத்துவர் ஒருவர், ஒரு ஜென் துறவியைச் சந்தித்து, ''ஆன்மிக உணர்வை அடைய நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார். அப்போது துறவி, அமைதியாகச் சொன்னார்... ''உன்னிடம் வரும் நோயாளிகளிடம் கொஞ்சமேனும் கருணையுடன் நடந்துகொள்; அதுபோதும்!'' என்று. ஆம்... கருணையின் மூலம் மட்டுமே கடவுள் தன்மையை அடையமுடியும். கருணையுடன் இருப்பவர்கள், தங்களைச் சுற்றி இனிய அதிர்வலைகளை ஏற்படுத்துபவர்கள்; அவர்களிடம் மனிதம் இருக்கும். ஊழல் இருக்காது. அவர்கள் நசுக்கும்போது நறுமணம் தருகிற மலராகவும், கசக்கும்போது கற்கண்டுச்சாறு தரும் கரும்பாகவும் மாறுவார்கள்.

அன்பர்களே, மற்றவர்களெல்லாம் அன்புடன், கருணையுடன் இல்லையே, நான்மட்டும் நடந்து என்ன பயன்? என்று கவலைப்பட வேண்டியதில்லை. அதனை நம்மிடமிருந்தே தொடங்கலாம். ஏனெனில் சிரிப்பைப்போல அது மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும். இதன் மூலம் மானுடத்தில் தர்மங்களைத் தளைக்கச் செய்யலாம்.

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள்

சிந்தட்டும்! பாதை மாறலாமா?

இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்

வேகட்டும் கொள்கை சாகலாமா?

விடியலுக்கு இல்லை தூரம் விடியும்

மனதில் இன்னும் ஏன் பாரம்?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா? என்ற பாடல் வரிகள், மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படும் இவ்வாரத்தில் துணிச்சலைக் கொடுக்கட்டும்.








All the contents on this site are copyrighted ©.