2010-12-06 15:51:24

போபால் மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் இந்திய அரசின் முயற்சி குறித்து போபால் பேராயர் மகிழ்ச்சி


டிச.06, 2010. தொழிற்சாலைத் தொடர்புடைய உலகின் மிகப்பெரும் விபத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக வேதனைகளை அனுபவித்து வரும் இந்தியாவின் போபால் மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு அதிகரிக்கக் கேட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் போபால் பேராயர் லியோ கொர்நெலியோ.

பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகை 47 கோடி டாலர்களாக இருந்தது 132 கொடியாக உயர்த்தப்பட வேண்டும் என தலைமை நீதி மனறத்தில் அரசு விடுத்துள்ள விண்ணப்பம், பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றார் பேராயர்.

அரசியல் இலாபங்களுக்காக இப்பிரச்சனை மேலும் மேலும் இழுத்தடிக்கப்படாமல், தற்போது ஒரு தீர்வை நோக்கி வந்துள்ளது சிறப்பானது என்றார் பேராயர்.

போபால் பகுதியில் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி, மரம் நடுதலையும் ஊக்குவித்து வருகிறது தலத் திருச்சபை.

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இரவில் Union Carbide தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவு விபத்தில் 5,295 பேர் உடனடியாகவும், 25,000 பேர் இதுவரையிலும் இறந்துள்ளனர். 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பலவகைகளில் ஊனமாகியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.