2010-12-06 15:11:25

டிசம்பர் 07 நாளும் ஒரு நல்லெண்ணம்


டிசம்பர் 7. இந்நாளில் வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்திருந்தாலும் இரண்டு நிகழ்வுகள் மட்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவைகளாக இருக்கின்றன. ஒன்று ஹவாய்த் தீவிலுள்ள Pearl Harbor ல் நடந்த நிகழ்வு. இது அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கடற்படைத்தளம் அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியை ஹவாய் நாட்டுப் பூர்வீக மக்கள், "Wai Momi," அதாவது முத்துத் தண்ணீர் ("Water of Pearl) என்றழைத்தனர். ஹவாய் நாட்டு பழங்கால மக்களின் நம்பிக்கைப்படி இவ்விடம் சுறாமீன் தேவதை Ka'ahupahau மற்றும் அவளது சகோதரன் Kahiuka வும் வாழ்ந்த இடமாகும். இந்தக் கடவுள்கள் இந்த Pearl Harbor ன் நுழைவாயிலில் ஒரு குகையில் வாழ்ந்து கொண்டு இந்தச் சுறா மீன்களிடமிருந்து தண்ணீரைப் பாதுகாத்து வந்ததாக நம்பினர். முதலில் மனித உருவில் பிறந்த இந்தப் பெண் கடவுள் Kaahupahau பின்னர் சுறா மீனாக மாறியதாம். அந்தத் துறைமுகத்திலிருந்த ஏராளமான மீன் குளங்களில் வெளி ஆட்கள் நுழைந்து விடாதபடியும் இக்கடவுள்கள் காத்து வந்தனவாம். 1800 கள் வரை இந்தத் துறைமுகம் முத்துக்களை உற்பத்தி செய்யும் சிப்பிகளை அபரிவிதமாகக் கொண்டிருந்தன. ஆனால் அமெரிக்கக் காப்டன் ஜேம்ஸ் கூக், என்று அங்கு நுழைந்தாரோ அதன்பின்னர் அதன் வரலாறு மாறியது. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் 1875 ம் ஆண்டில் ஹவாய்த் தீவை ஆண்ட அரசனுக்கும் இடையே 1884ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் இவ்விடம் அமெரிக்காவின் கைக்கு மாறியது. Pearl Harbor ன் உரிமை அமெரிக்காவிடம் வந்தது. நாளடைவில் அது அமெரிக்கக் கடற்படைத் தளமானது. 1941 ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜப்பானியப் போர் விமானங்கள் இந்தக் கடற்படைத் தளத்தைக் கடுமையாய்த் தாக்கின. இதில் 3,200 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 12 போர்க் கப்பல்கள் கடலில் முழுவதும் மூழ்கின. மேலும் 9 சேதமாகின. 160 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. மேலும் 150 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் சேதமாகின. இதனை Pearl Harbor ன் மீதானக் கடுமையானத் தாக்குதல் என்று ஓர் அமெரிக்கத் தளபதி விவரித்தார். இந்தத் தாக்குதலால் அமெரிக்க அரசுத் தலைவர் Franklin Roosevelt ஜப்பானுக்கு எதிராகப் போரை அறிவித்தார். இவ்வாறு அமெரிக்க ஐக்கிய நாடு இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது.

Pearl Harbor மீதான இந்தத் தாக்குதல் வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்று விட்டது. இத்தகைய அதிரடி விமானத் தாக்குதல்கள் இன்றும் நாடுகளில் தொடர்கின்றன. அண்மையில் வட மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையே இத்தகைய தாக்குதல்கள் இடம் பெற்றன. அமெரிக்க ரைட் சகோதரர்கள் Orville யும் Wilbur யும் கண்டுபிடித்த ஆகாய விமானங்கள் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வானூர்திப் பயணங்கள் இன்றைய உலகத்தை ஒரு குக்கிராமமாக மாற்றி விட்டன. காலையில் இந்தியாவில் புறப்பட்டால் அன்று மாலையே ஐரோப்பாவில் வந்திறங்க முடிகிறது. இந்த விமானச் சேவைகளின் பயன் கருதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1996 ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதியை அனைத்துலக விமானப் பயண நாளாக அறிவித்தது. எனினும் சர்வதேச விமானப் பயண ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 50 ஆண்டுகள் 1994ம் ஆண்டில் நிறைவடைந்ததால், சர்வதேச விமானப் பயணப் பாதுகாப்பு நிறுவனம் (ICAO) அவ்வாண்டிலிருந்தே இந்த உலக நாளை கடைபிடிக்கத் தொடங்கியது. இந்த ICAO நிறுவனம் 1944ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உருவாக்கப்பட்டது.

ஆக, 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி Pearl Harbor ல் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஈடுபடக் காரணமானது. இதே நாள் அனைத்துலக விமானப் பயணப் பாதுகாப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

நம் முன்னோர் விட்டுச் சென்றவற்றை வைத்து நம் வாழ்க்கைத் தொடர்கிறது. நாம் விட்டுச் செல்பவற்றை வைத்துத்தான் நம் சந்ததியின் வாழ்க்கைத் தொடரும். இவ்வுலக வாழ்க்கையில் எந்த ஒரு பயணமும் முடிவதில்லை. இந்தப் பயணத்தில் எந்தவிதமான திசைகாட்டிகளை, காலடித்தடங்களை நாம் விட்டுச் செல்ல விரும்புகிறோம்?








All the contents on this site are copyrighted ©.