2010-12-04 15:39:49

டிசம்பர் 05, நாளுமொரு நல்லெண்ணம்


"சிறுகச் சிறுக சேகரித்து வாழ்வதென்பது அமெரிக்காவில் குடியேறியவர்களின் ஆரம்பக் கனவாக இருந்தது. ஆனால், அந்த அமெரிக்கக் கனவு ஒரு நாளில் மாறியது. அனைவரும் விரைவில் செல்வம் சேர்க்க விழைந்தனர். 'விரைவில் செல்வம்' என்பதே அமெரிக்காவில் குடியேறியவர்களின் தாரக மந்திரம் ஆனது."
அமெரிக்க வரலாற்றை (The Age Of Gold: The California Gold Rush And the New American Dream - 2002) எழுதியுள்ள Henry William Brands இவ்வாறு கூறியுள்ளார். 'விரைவில் செல்வம்' என்ற இந்த அமெரிக்கக் கனவு ஆரம்பமான நாள் 1848ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி. அன்று, கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் (James K.Polk) அறிவித்தார்.
அவரது அறிக்கை கலிபோர்னியா பகுதிக்குக் கோடிக்கணக்கான மக்களை இழுத்தது. தங்க வேட்டை ஆரம்பமானது. தங்கம் மட்டும் வேட்டையாடப்படவில்லை. மக்களின் உயிர்களும் வேட்டையாடப்பட்டன. முக்கியமாக, அப்பகுதியில் வாழ்ந்த அமெரிக்க பழங்குடியினரின் உயிர்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டன.
1848க்குப் பின் அமெரிக்காவின் ஆரம்பக் கனவு மட்டுமல்ல, அந்நாட்டின் வரலாறே தலை கீழாக மாறியது. இன்றும் அமெரிக்காவைத் தேடிப் போகும் கோடிக்கணக்கானவர்களின் கனவு 'விரைவில் செல்வம்' என்பது தானே?ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டையிட்டு வந்த வாத்தின் வயிற்றைக் கிழித்து, ஒரே நாளில் அத்தனை முட்டைகளையும் எடுக்க விழைந்தவரின் பரிதாபக் கதை நமக்கு இன்னும் பாடங்களைச் சொல்லித் தந்ததாகத் தெரியவில்லை.







All the contents on this site are copyrighted ©.