2010-12-04 15:23:39

ஒவ்வொருவரின் உரிமைகளை மதிப்பதே உண்மையான ஒருங்கிணைந்த மனித வாழ்வுக்கு இன்றியமையாதது - திருப்பீடச் செயலர்


டிச.04,2010. எந்த ஒரு மனிதனும் தன்னிலே வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் உடன் வாழும் ஒவ்வொருவரின் உரிமைகளை மதிப்பதே உண்மையான ஒருங்கிணைந்த மனித வாழ்வுக்கு இன்றியமையாதது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

கஜகஸ்தான் நாட்டு அதிகாரிகளின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கர்தினால் பெர்த்தோனே, உண்மையான கிறிஸ்தவனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கினார்.

கஜகஸ்தான் நாட்டு கரகாண்டா புனித வளன் பேராலயத்தில் இச்சனிக்கிழமை திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக் கொள்ள விரும்பும் எவரும் தங்களது மனநிலையைத் தொடர்ந்து மாற்றிக் கொள்பவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது” என்ற ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் மறையுரையாற்றிய கர்தினால், கடவுளை ஒதுக்கி வாழும் வாழ்வினால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கையையும் முன்வைத்தார்.

ஒரு கோடியே ஐம்பது இலட்சத்திற்கு அதிகமான மக்களைக் கொண்ட கஜகஸ்தான் நாட்டில் ஏறக்குறைய 13 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். இவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கத்தோலிக்கர். இந்நாட்டில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள்.








All the contents on this site are copyrighted ©.