2010-12-03 15:39:10

இஸ்ரேல் நாட்டின் கார்மேல் மலைப் பகுதியில் மிகப் பெரும் தீ விபத்து


டிச.03, 2010. இஸ்ரேல் நாட்டின் கார்மேல் மலைப் பகுதியில் இவ்வியாழனன்று ஆரம்பித்த தீ, இவ்வெள்ளி காலை வரை 41 பேரின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது, மற்றும் 13,000 பேர் அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் தீ விபத்தென்று ஊடகங்கள் கூறும் இந்த விபத்தால் இது வரை 3000 ஹெக்டேர் நிலப்பரப்பு அழிந்துள்ளதென்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வளவு பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தைச் சமாளிக்க இஸ்ரேல் நாட்டில் போதிய வசதிகள் இல்லாததால், இஸ்ரேல் பிரதமர் Netanyahu விடுத்துள்ள அழைப்பின் பேரில் கிரீஸ், இஸ்பெயின், சைப்ரஸ், இரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து தீயணைக்கும் உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் பிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளிலிருந்தும் தீயணைக்கும் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.சிறைக் காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இந்தத் தீயில் முற்றிலும் அழிந்ததென்று கூறப்படுகிறது. இப்பெரும் தீ விபத்திற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கார்மேல் மலைப் பகுதிகளில் மழையில்லாததால், அங்கு நிலவி வரும் பெறும் வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.