2010-12-02 15:48:05

ஈராக் நாட்டில் மேலும் ஒரு கத்தோலிக்கர் கொலை கிறிஸ்தவர்கள் கண்டனம்


டிச.02, 2010. ஈராக் நாட்டின் மொசுல் நகரில் இச்செவ்வாயன்று கிறிஸ்தவப் பொறியியலாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஆயர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் வன்மையான கண்டனங்களை ஈராக் அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.
“சகிப்புத் தன்மையுடன் ஒற்றுமையாய் வாழும் வழிகள்” என்ற தலைப்பில் ஈராக் அரசின் மனித உரிமைகள் துறை இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்கு கத்தோலிக்க ஆயர்கள் உட்பட, பல்வேறு கிறிஸ்தவ அமைப்பைச் சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
கூட்டத்திற்கு முந்திய நாள் செவ்வாயன்று Fadi Walid Gabriel என்ற 26 வயது நிறைந்த சிரியரீதி கத்தோலிக்கப் பொறியியலாளர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக கிறிஸ்தவர்கள் கூறினர்.
இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளில் கிறிஸ்தவர்கள் அரசிடம் வலியுறுத்திக் கேட்கும் கோரிக்கைகள் சேர்த்துக் கொள்ளப்படும் என்று மனித உரிமைகள் துறை அளித்த வாக்குறுதிக்குப் பின் கிறிஸ்தவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கும் கிறிஸ்தவர்களது அடிப்படை உரிமைகளை அரசு காப்பாற்ற வேண்டுமென்று கோருவது எங்களது குடியுரிமை என்று Kirkuk கால்தீய ரீதி பேராயர் லூயிஸ் சாகோ கூறினார்.







All the contents on this site are copyrighted ©.