2010-12-01 15:56:16

சீனக் கத்தோலிக்கர்களுக்காகச் செபிக்கும் படி திருத்தந்தையின் சிறப்பான அழைப்பு


டிச.01, 2010 உலகின் அனைத்து கத்தோலிக்கர்களுக்காகவும், முக்கியமாக, அண்மைய காலங்களில் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் சீனக் கத்தோலிக்கர்களுக்காகவும் செபிக்கும் படி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை ஆறாம் பவுல் மன்றத்தில் குழுமியிருந்த 40க்கும் மேலான சீனக் கத்தோலிக்கர்களுடனும், தன்னுடனும் இணைந்து செபிக்கும் படி இச்சிறப்பான அழைப்பினை விடுத்தார் திருத்தந்தை.
சீன கத்தோலிக்கர்களையும், சிறப்பாக அரசின் நெருக்கடிகளின் மத்தியிலும் அங்கு பணி புரியும் ஆயர்களையும் அனைத்து கிறிஸ்தவர்களின் உதவியாளரான அன்னை மரியா தன் பாதுகாவலில் வைத்து காக்க வேண்டுமென்று திருத்தந்தை வேண்டுதலை எழுப்பினார்.
அகில உலகத் திருச்சபைக்கும் சீன அரசுக்கும் இடையே அவ்வப்போது உருவாகும் உரசல்கள் அண்மைக் காலங்களில் வலுத்துள்ளது என்பதை அங்கு நடத்தப்பட்ட ஓர் ஆயரின் திருநிலைப்பாடு உணர்த்துகிறது என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.வத்திக்கானின் ஆதரவு இல்லாமல் சீன அரசின் ஆதரவுடன் இயங்கும் ஒரு சபையின் ஆண்டு கூட்டம் Beijingல் டிசம்பர் 7 முதல் 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் திருத்தந்தையின் இச்செபத்திற்கான விண்ணப்பம் குறிப்பிடத்தக்கது என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.