2010-12-01 15:58:09

அணு ஆயுதக் குறைப்பை வலியுறுத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்


டிச.01, 2010 அணு ஆயுதக் குறைப்பு குறித்து அமெரிக்கப் பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணு ஆயுதக் குறைப்பை வலியுறுத்தி மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் அகில உலக நீதி மற்றும் அமைதிக்கான பணிக் குழுவின் தலைவரான நியூயார்க் Albany ஆயர் Howard Hubbard இத்திங்களன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அணு ஆயுதக் குறைப்பு முடிவுக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டு ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவும் இரஷ்ய அரசுத் தலைவர் Dmitry Medvedevம் அணு ஆயுத குறைப்பு பற்றி கையெழுத்திட்ட புதிய START ஒப்பந்தம் தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
அணு ஆயுதக் குறைப்பில் திருப்பீடமும், அமெரிக்க ஆயர் பேரவையும் ஒருமித்தக் கருத்துடன் இப்புதிய START ஒப்பந்தத்தைப் பெரிதும் ஆதரித்து வருகின்றன என்று அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற நியூயார்க் பேராயர் Timothy Dolan தெரிவித்தார்.மனித உயிர்களை இவ்வுலகம் இன்னும் மதிக்கிறது என்பதற்கு அணு ஆயுதக் குறைப்பு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும் என்று பேராயர் Dolan மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.