2010-12-01 15:56:50

அகில உலக எய்ட்ஸ் நாளையொட்டி உலகக் காரித்தாஸ் அமைப்பின் முயற்சிகள்


டிச.01, 2010 HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் வாழ்வதற்கு அனைத்து வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும் என்று அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
டிசம்பர் முதல் தேதி அகில உலக எய்ட்ஸ் நாளென்று கடைபிடிக்கப்படும் வேளையில் ஐ.நா.வின் UNAIDS நிறுவனம் வெளியிட்ட 2010க்கான உலக அறிக்கையில் 25 இலட்சம் குழந்தைகள் HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானதையொட்டி கர்தினால் Maradiaga இவ்வாறு கூறினார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், அந்நோய்க்கான சோதனைகளை மேற்கொள்ளத் தயங்குவதால், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகள் அந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று UNAIDS அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, ஆப்ரிக்கா பகுதிகளில் இயேசுசபைக்குத் தலைவரான அருள்திரு Fratern Masawe எய்ட்ஸ் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்நாளில் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். உலகில் தற்போது எய்ட்ஸ் நோய்க்கென்று ஒதுக்கப்படும் நிதி உதவி பெரிதும் குறைந்து வருகிறதென்று அம்மடலில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.நமது பணியானது மருத்துவ வழிகளில் மட்டும் அமையாமல், இந்நோய் கண்டோர், அவர்களது உறவினர்கள் அனைவரும் சராசரி மனித வாழ்வு வாழ்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதிலும் அமைய வேண்டும் என்று அருள்தந்தை Masawe கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.