2010-11-30 15:54:53

கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபைக்குத் திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


நவ.30, 2010. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும் நிலை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவங்கள் அதிகரித்துவரும் இன்றையச் சூழலில் நற்செய்தியின் உண்மைகளை எடுத்துரைப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடன் நாம் செயல்படவேண்டிய தேவை உள்ளது என கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

Ecumenical கிறிஸ்தவ சபையின் பாதுகாவலரான அப்போஸ்தலர் புனித அந்த்ரேயாவின் திருவிழாவையொட்டி ஈஸ்தான்புல்லுக்கு திருப்பீடத்தின் சார்பில் கர்தினால் குர்த் கோச் தலைமையில் அனுப்பிய குழுவின் வழி வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, இன்றைய உலகின் மக்களில் எழும் ஆழமான கேள்விகளுக்கும் ஆன்மீக ஏக்கங்களுக்கும் விடை காண உதவும் வகையில் கிறிஸ்தவ சபைகளின் நற்செய்தி அறிவிப்பு பணி இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய நம் பணி வெற்றியடைய வேண்டுமெனில், முதலில் கிறிஸ்தவசபைகளிடையேயான ஒன்றிப்பு எனும் சாட்சியம் இன்றியமையாதது என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் பாப்பிறை. கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் Ecumenical கிறிஸ்தவ சபையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், சர்வதேச நிலைப்பாடுகளில் கிறிஸ்தவ மதிப்பீடுகளை மேம்படுத்தும் குல முதல்வர் முதலாம் பர்த்தலோமெயோவின் ஞானமுடைய முயற்சிகளையும் பாராட்டுவதாகவும் தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.