2010-11-29 14:46:25

இதயத்தில் நம்பிக்கை உயிரோட்டமாய் இருக்கும் வரையில், மனிதனும் உயிரோட்டமாய் இருக்கிறான் என்கிறார் பாப்பிறை


நவ 29, 2010. காத்திருப்பின் காலமான திருவருகைக்காலம், நாம் எந்த நம்பிக்கையில் உள்ளோம், நமது இதயம் எதற்காக ஏங்குகிறது என்பது குறித்து நம்மையே கேட்கும் காலமாகும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கன்னிமரியிடம் பிறப்பெடுத்த இறைமகனின் முதல் வருகையையும், வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட வரும் அவரின் மகிமை நிறை மறு வருகையையும் நோக்கும் திருவருகைக்காலத்தின் இம்முதல் ஞாயிறன்று மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, நம் வாழ்வின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக நிலைப்பாடுகள், காத்திருப்பு எனும் கூறுகள் வழியாகவே கடந்து செல்கின்றன என்றார்.
காத்திருப்பு என்பது நம்மை முழுமையாக, மற்றும் ஆழமான விதத்தில் கவர்ந்திழுக்கின்றது எனவும் கூறிய பாப்பிறை, அதற்கு உதாரணமாக, குழந்தைக்காக, உறவினர்களுக்காக, தேர்வு முடிவுகளுக்காக, கடிதத்திற்காக, மன்னிப்பைப்பெறுவதற்காக என பல்வேறு காத்திருப்புகள் நம் வாழ்வில் உள்ளன என்றார். இத்தகைய காத்திருப்புகள் உள்ளவரையில், இதயத்தில் நம்பிக்கை உயிரோட்டமாய் இருக்கும் வரையில், மனிதனும் உயிரோட்டமாய் இருக்கிறான் என்றார் பாப்பிறை.
நம் காத்திருப்பின் நோக்கம் என்ன? நம் அனைவரின் ஏக்கங்களுக்கும் பொதுவாக இருப்பது என்ன? என்பது குறித்து இத்திருவருகைக்காலத்தின் போது ஆழமாக தியானிப்போம் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.