2010-11-26 14:56:32

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் குறித்த சட்டத்தில், இல்லங்களில் பணி செய்வோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் - இந்தியத் திருச்சபை


நவ.26, 2010. பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் குறித்து வரையறுக்கப்பட உள்ள சட்டத்தில், இல்லங்களில் பணி செய்வோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியத் திருச்சபை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் வீடுகளில் பணி செய்யும் பெண்கள் மிக அதிகமாக உள்ள சூழலில், பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் என்பதைக் குறித்து விவாதிக்கும் அரசு, இவர்களை இந்தச் சட்டத்தின் பார்வைக்குள் கொண்டு வராமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறதென்று டில்லி உயர் மறைமாவட்டப் பேராயர் Vincent Concessao கூறினார்.
வீடுகளில் பணி செய்வோருக்கு எந்த வித சட்டப் பாதுகாப்பும் இல்லாத போது, அரசும் அவர்களை விலக்கி வைத்திருப்பது அநீதியான ஒரு செயல் என்று பேராயர் எடுத்துரைத்தார்.
பாலியல் வன்முறைகள் பலவற்றிற்கும் பெருமளவில் உட்படுத்தப்படுவது வீடுகளில் பணி செய்யும் பெண்களே என்றும், முக்கியமாக, பழங்குடி பெண்களும் சிறுமிகளும் இத்தகைய வன்முறைகளை நாளும் சந்திக்கின்றனர் என்றும் இந்திய சமுதாய நிறுவனத்தில் (Indian Social Institute) பணி புரியும் இயேசுசபை குரு சேவியர் ஜெயராஜ் கூறினார்.பெண்கள் அமைப்புக்கள் மூலம் பணிகள் செய்து வரும் Ranjana Kumari, Jyotsana Chatterjee ஆகியோர் பேராயரின் கூற்றுக்களைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.