2010-11-26 14:55:30

துறவு சபை தலைவர்களின் சர்வதேச ஒருங்கிணைப்பு அவைக் கூட்டத்திற்குத் திருத்தந்தை வழங்கிய உரை


நவ.26, 2010. மனித குலத்திற்காகவும், நற்செய்தி அறிவிப்புக்காகவும் திருச்சபையிலும், திருச்சபையோடு இணைந்தும் துறவு சபையினர் ஆற்றியுள்ள பணிகளுக்காக நன்றி கூறுவதோடு, நற்செய்திக்குச் சான்று பகர்வதில் துன்பங்களை அனுபவிக்கும் துறவறத்தாரைச் சிறப்பான விதத்தில் நினைவு கூர்வதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
துறவு சபை தலைவர்களின் சர்வதேச ஒருங்கிணைப்பு அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, பங்குதள மேய்ப்புப் பணிகள், கலாச்சார மையங்கள், மறைக் கல்வி, குழந்தைகள், இளையோர் மற்றும் முதியோர்களிடையேயான பணி ஆகியவைகள் மூலம் துறவு சபைகள் ஆற்றும் பணி, இறைவனுக்கும் மனித குலத்திற்குமான அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.
ஐரோப்பாவில் அர்ப்பண வாழ்வின் வருங்காலம் குறித்து, துறவு சபை தலைவர்களின் கடந்த இரு கூட்டங்கள் விவாதித்துள்ளதைப் பற்றி குறிப்பிட்டு, அவ்வாழ்வின் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்தும் எடுத்தியம்பினார் பாப்பிறை.இன்று திருச்சபையில், குறிப்பாக, ஐரோப்பாவில் அர்ப்பண வாழ்விற்கான இறை அழைத்தல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை, மனந்தளராமல், உறுதியுடன் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துறவு சபைகள் நடை போட வேண்டியதற்கான ஊக்கத்தையும் வழங்கினார்.







All the contents on this site are copyrighted ©.