2010-11-24 13:51:49

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


நவ 24, 2010. இது குளிர் காலமா கோடை காலமா அல்லது மழைக்காலமா என்று குழம்பிப்போயிருக்கும் நிலையில் உரோம் நகரம் திணறிக்கொண்டிருக்க, இப்புதன் விடியற்காலை வரை தூறிக்கொண்டிருந்த வானம், எட்டு மணிக்கெல்லாம் சூரிய ஒளியை வாரி வழங்கி, கோடை கால பிரகாசம் போன்ற ஒரு மயக்கத்தைத் தர, குளிரும் குறைந்திருக்க, திருந்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தன் இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தொமினிக்கன் மூன்றாம் சபையைச் சேர்ந்த சியென்னாவின் கத்ரீன் குறித்து இன்றைய மறைபோதகத்தில் நோக்குவோம். இவர் ஒரு புனிதம் நிறை பெண் மற்றும் திருச்சபையின் மறை வல்லுனர். வானுக்கும் மண்ணுக்கும் இடையேயான பாலமாய் விளங்கும் இயேசு கிறிஸ்துவுடன் ஆன நம் ஐக்கியத்தை மையம் கொண்டதாக புனித கத்ரீனின் ஆன்மீகப் படிப்பினைகள் இருந்தன. மணமகனாம் கிறிஸ்துவுக்கு இவர் தன் கன்னிமையை அர்ப்பணமாக்கியது, இவர் கண்ட புகழ்வாய்ந்த திருக்காட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும் எண்ணற்ற பெண்கள் வாழ்ந்து செயல்படுத்திய ஆன்மீகத் தாய்மைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து புனித கத்ரீனின் வாழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது. புனிதத்துவத்திலும், இறைவனுக்கான அன்பிலும், அவரின் மறையுடலாம் திருச்சபைக்கு உண்மையாய் இருப்பதிலும் நாம் வளர்வதற்கு இம்மாபெரும் புனிதையிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.