2010-11-24 15:50:03

உலக அளவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் நல்ல பலனைக் காட்டுகின்றன - ஐ.நா.அறிக்கை


நவ.24,2010. எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படும் மற்றும் எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புகள் உலக அளவில் குறைந்து வருவது இந்நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் நாடுகளில் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.

UNAIDS என்ற ஐ.நா.எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் நல்ல பலனைக் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் எய்ட்ஸ் நோயின் நிலவரம் குறித்து 182 நாடுகளில் எடுத்த ஆய்வின்படி, சுமார் 26 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வெண்ணிக்கை 1999ஆம் ஆண்டில் இக்கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைவிட சுமார் இருபது விழுக்காடு குறைவு என்றும் தெரிகிறது.

2009ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய நோய்களால் சுமார் 18 இலட்சம் பேர் இறந்தனர், இவ்வெண்ணிக்கை 2004ஆம் ஆண்டில் இடம் பெற்றதைவிட ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதி குறைவு என்றும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.

2009ஆம் ஆண்டில் சுமார் 3,70,000 சிறார் HIV நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டனர், ஆயினும் இதற்கு ஐந்து ஆண்டுகளுக்குமுன் காணப்பட்டதைவிட இவ்வெண்ணிக்கை 24 விழுக்காடு குறைவு என்றும் அவ்வாய்வு கூறுகிறது.

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்








All the contents on this site are copyrighted ©.