2010-11-24 15:44:35

இந்தியா: உத்தரபிரதேசத்தில் தலித்துக்கள் தோட்டி வேலை செய்யத் தடை, தலத்திருச்சபை பாராட்டு


நவ.24,2010. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கழிப்பறைகளிலிருந்து மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் வேலைகள் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து திருச்சபை மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணைக்குழுவின் செயலரான அருள்திரு காஸ்மன் ஆரோக்யராஜ் (Cosmon Arokiaraj), இது, தலித்து மக்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய கொடை என்று கூறினார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் Badaun மாவட்ட நிர்வாகம், இம்மாதத்தில், யூனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டத்தை முடித்துள்ளது. அத்துடன் பழையக் கழிப்பறைகளை நவீனக் கழிப்பறைகளாகவும் மாற்றியுள்ளது.

Badaun மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அறுபதாயிரம் பழையக் கழிப்பறைகளில் 21 ஆயிரம், நவீனக் கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 4,000 துப்புரவுப் பணியாளர்களில் சுமார் 1,500 பேருக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்தியாவில் சுமார் 12 இலட்சம் பேர் கழிப்பறைகளிலிருந்து மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் வேலைகளைச் செய்து வருகின்றனர். இவர்களில் 95 விழுக்காட்டினர் தலித்துக்கள் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.