2010-11-23 15:30:38

விவிலியத் தேடல்


RealAudioMP3
குழந்தைகளிடம் இருந்து பல பாடங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பது நமக்குத் தெரியும். அப்பாடங்களில் ஒன்று இருளை எப்படி சமாளிப்பது என்பது. இருள் சூழும் போது, பெற்றோரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டால், அல்லது அவர்கள் மார்பில் முகம் புதைத்துக் கொண்டால் அந்த இருள் போய்விடும் என்பது குழந்தைகளின் எண்ணம். குழந்தைகள் சிறிது வளர்ந்து சிறுவர்களான பின், இருளைக் கடந்து செல்லும் போது, சப்தமாகப் பாடிக் கொண்டோ அல்லது ஒரு கற்பனைக் காரை ஒட்டிக் கொண்டோ செல்வார்கள். பெற்றோரின் கரங்களைப் பற்றினாலோ, கற்பனைக் காரை ஓட்டினாலோ, இருள் போகாது. ஆனால், இருளின் பயம் போய்விடும். திருப்பாடல் 23ன் ஆசிரியர் வலியுறுத்துவதும் இதுதான்.
இருள், தீய சக்திகள் இவ்வுலகை விட்டுப் போகாது. ஆனால், ஆயனின் துணையிருந்தால், அந்த இருள் தரும் பயம், தீய சக்திகளின் ஆதிக்கம் குறையும். இருள் சூழும் வேளையில் உள் மனதில் ஒளி இருந்தால், இருளைக் கடக்க முடியும் என்று சொல்கிறார் திருப்பாடல் 23ன் ஆசிரியர். "சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் நான் அஞ்ச மாட்டேன்." என்று கூறும் திருப்பாடல் ஆசிரியருடன் நம் தேடலைத் தொடர்வோம்.

'சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு' என்ற சொற்றொடரை 'சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கு' என்றும் ஒரு சில விவிலியப் பதிப்புக்களில் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர். இருள், நிழல் என்ற இரு சொற்களும் பல சிந்தனைகளை நம்மில் உருவாக்குகின்றன.
ஒளி மறையும் போது, இருள் தோன்றும் - பகல் முடிந்து இரவு வரும். ஒளியும் இருளும் சேர்ந்திருக்க முடியாது. ஆனால், ஒளியும் நிழலும் சேர்ந்திருக்க முடியும். பார்க்கப்போனால், ஒளி இருந்தால் தான் நிழல் இருக்க முடியும். ஒளியின் ஒரு பகுதிதான் நிழல்.
நிழலின் ஒரு சில அம்சங்களை ஆழமாக ஆராய்ந்தால், "சாவின் நிழல்" என்ற வார்த்தைகளின் ஆழத்தையும் நாம் உணர முடியும். ஒளியில் நாம் நிற்கும் போது, நம் உடலோடு ஒட்டியபடியே இருப்பது நமது நிழல். அதேபோல், உலகில் எந்த ஓர் உயிரும் வாழ்வை ஆரம்பித்ததும், சாவு என்ற உண்மையும் அந்த உயிருடன் ஒட்டிக் கொள்கிறது. எப்படி ஒளியும் நிழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாய் உள்ளனவோ, அதேபோல், வாழ்வு, சாவு இரண்டும் ஒரே உண்மையின் இரு கண்கள்.
நிழலைக் குறித்த மற்றொரு அம்சம் அதன் அளவு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு ஒளியின் அருகில் நிற்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது நிழலின் அளவு பெரிதாகும். ஒளியை விட்டு நாம் தள்ளி நின்றால், நமது நிழலின் அளவும் சுருங்கிவிடும். ஒளியை நெருங்கும் நாம், ஒளியில் மட்டுமே நமது கண்களைப் பதித்தால், நமக்குப் பின் புறமாய் உருவாகும் நிழல் பூதமாகப் பெருத்தாலும், நம்மை அது பயமுறுத்தாது. ஆனால், ஒளிக்கு மிக அருகில் நின்று கொண்டு, ஒளியைப் பார்க்காமல் திரும்பி நின்றால், பெருமளவு உயர்ந்து, பெருத்துக் காணப்படும் நமது நிழலே நம்மைப் பயமுறுத்தும்.
வாழ்வெனும் ஒளியை அதிகம் நெருங்கி, நேசித்து வாழ்பவர்களுக்கு, சாவெனும் நிழல் எவ்வளவு பெரிதாகத் தெரிந்தாலும், பயத்தை உருவாக்காது. ஒரு சில வாரங்களுக்கு முன் சாவின் நிழல் தங்களைச் சூழ்ந்துள்ளதென்பதைத் தெளிவாகத் தெரிந்து வாழ்ந்த Randy Pausch என்ற பேராசிரியர், Gitanjali Ghai என்ற இளம்பெண் இவர்களைப் பற்றி சிந்தித்தோம். இவர்கள் சாவின் இருள், நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்து அக்கரைக்குச் சென்று விட்டவர்கள். ஆனால், அவர்களைச் சூழ்ந்து நெருக்கிய சாவின் நிழல் அவர்களை பயமுறுத்தாமல் மன நிறைவோடு இந்தப் பள்ளத்தாக்கில் நடந்தவர்கள். எப்படி இந்தப் பள்ளத்தாக்கில் நடப்பது என்று நமக்குச் சொல்லிச் சென்றவர்கள்.
நாம் நெருங்கிச் செல்லும் ஒளி ஆயனாம் இறைவன் தான் என்ற எண்ணம் உள்ளத்தை நிறைத்தால், வேறு எந்த இருளோ நிழலோ நம்மைப் பாதிக்க அதிகம் வாய்ப்பில்லை. Look toward the light, and the shadow of your burden will fall behind you. - Anonymous "ஒளியைப் பார்த்து நில். உன் பாரங்களின் நிழல் உன் பின் விழும்." என்பது நான் அடிக்கடி வாசித்த ஒரு மேற்கோள்.
இதே எண்ணத்தை Khalil Gibran தான் எழுதிய 'The Prophet' என்ற புத்தகத்தில் வேறு விதமாகக் கூறியுள்ளார்:
"சூரியனுக்குத் தங்கள் முதுகைக் காட்டி நிற்கும் மனிதர்களுக்குச் சூரியனால் என்ன பயன்? அவர்களைப் பொறுத்தவரை, அவர்களது நிழலை பூமியில் வரையும் ஒரு கருவிதானே சூரியன்?"

சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கைப் பற்றி Harold Kushner தன் புத்தகத்தில் விளக்கம் தரும் போது, ஒரு முக்கிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். திருப்பாடலின் ஆசிரியர் இந்த வரிகளில் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்... என்று சொல்லியிருக்கிறாரே தவிர, சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் வாழ்ந்தாலும்... என்று சொல்லவில்லை. பள்ளத்தாக்கில் நடப்பது வேறு, அங்கேயே தங்கிவிடுவது வேறு.
இந்த வேறுபாட்டை விளக்க, Harold Kushner தன் வாழ்வின் ஒரு சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். Harold Kushner "ஆண்டவர் என் ஆயன்" என்ற புத்தகத்தை எழுதுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று 2001ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு இடிந்து, 3000 பேரின் உயிர்கள் பலியான அந்த சம்பவம். இது தவிர, Harold Kushner "ஆண்டவர் என் ஆயன்" என்ற இந்தப் புத்தகத்தையும், துன்பத்தின் விளக்கம் குறித்து இன்னும் ஒரு சில புத்தகங்களையும் எழுத வேறொரு முக்கியமான காரணம் அவரும் அவரது மனைவியும் தங்கள் அருமை மகன் Joshuaவாவை இழந்ததுதான்.
அரியதொரு வியாதியால் தங்கள் 12 வயது மகனை இழந்த Kushnerஐயும் அவரது மனைவியையும் சாவின் நிழல் சூழ்ந்தபோது, அவர்களுக்கு ஆறுதல் கூற "The Compassionate Friends" என்ற குழு பெரிதும் உதவியது.
இந்தக் குழுவில் இருந்த அனைவரும் தங்கள் குழந்தைகளை, பிள்ளைகளைச் சிறு வயதில் பறி கொடுத்தவர்கள். இவர்கள் மாதத்திற்கு ஒரு முறை கூடி வந்து, தங்கள் வேதனைகளையும் அந்த வேதனைகளைச் சமாளிக்கும் வழிகளையும் பகிர்ந்து வந்ததால், குழுவில் இருந்த அனைவரும் பல வழிகளில் ஆறுதல் அடைந்தனர். புத்திர சோகம்தான் உலகில் ஆழமான சோகம் என்பது நாம் சொல்லும் ஒரு கூற்று. பெற்றோர் உயிரோடு இருக்கும் போது, தங்கள் குழந்தைகளைப் பறி கொடுப்பது பெரும் கொடுமை. அந்தத் தனிப்பட்டக் கொடுமையை உணர்ந்தவர்கள் கூடி வந்து பகிர்ந்தது பெரும்பாலும் வேதனைகள் தாம் என்றாலும், அந்தக் குழுவின் மூலம் தானும் தனது மனைவியும் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடப்பதற்கு அக்குழுவினர் பெரிதும் உதவினர் என்று Kushner சொல்கிறார்.
அந்தக் குழுவின் கூட்டங்களில் நான்கு, ஐந்து மாதங்கள் கலந்து கொண்ட பின்னர் இருவரும் தங்கள் வேதனையைச் சமாளிக்க பக்குவப்பட்டு விட்டதாகக் கூறுகிறார் Kushner. ஆனால், ஒரு சில பெற்றோர் இக்கூட்டங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் கவலையோடு குறிப்பிடுகிறார் Kushner. இத்தனை ஆண்டுகள் கழித்தும், இவர்கள் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியுள்ளனரே என்ற தன் ஆதங்கத்தை வெளியிடுகிறார்.

ஒவ்வொருவரின் வேதனையும் வேறுபட்டது... உண்மைதான். அதிலும் நம் வாழ்வின் வேர்களாக இருக்கும், குழந்தைகளை, வாழ்க்கைத் துணையை, பெற்றோரை, உடன் பிறந்தோரை, மிக நெருங்கிய நண்பர்களை இழக்கும் போது, நமது வேதனையின் அளவோ, அந்த வேதனை நீடிக்கும் காலமோ பெரிதும் வேறுபடும். நம் உடலோடு ஒட்டிக் கொள்ளும் நிழலைப் போல், இந்த அன்பு உள்ளங்களின் பிரிவு தரும் வேதனை பிரித்தெடுக்க முடியாதபடி நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றது.
இந்த வலியும், வேதனையும் எவ்வளவு தான் ஆழமானதென்றாலும், நாம் இந்தச் சாவின் பள்ளத்தாக்கில் தங்கிவிட முடியாது, தங்கிவிடவும் கூடாது. அப்படி நாம் தங்குவது இறந்த அந்த உறவுக்கு நாம் காட்டும் சரியான அன்பாக இருக்காது என்று தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் Kushner. தன் அனுபவத்தின் மூலம் இதை விளக்குகிறார் அவர்.
துன்பத்தின் ஆழத்தைக் குறித்து அவர் எழுதியுள்ள புத்தகங்களைப் பலரும் படித்துள்ளதால், தங்கள் துன்பத்தை விட்டு, சாவின் இருள் சூழ்ந்த அந்தப் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறும் வழிகளை மக்கள் Kushnerஇடம் கேட்பார்கள். அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, அவர் அவர்களிடம் வேறொரு கேள்வியைக் கேட்பார்: "இறந்துபோன உங்கள் அன்புள்ளத்திற்குப் பதிலாக, ஒருவேளை, நீங்கள் இறந்திருந்தால், உங்கள் இறப்பிற்குப் பின் அந்த அன்புள்ளம் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?" என்று Kushner கேட்பார். அவர்களில் பலர் சொல்லும் பதிலையும் தன் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் நமக்கும் தெரிந்த பதில் தான்... அதாவது: "என்னுடைய சாவு உனக்குப் பெரும் வேதனையாக இருக்கும். ஆனால், அந்த வேதனையிலேயே நீ தங்கிவிடக் கூடாது. நாம் வாழ்ந்த அன்பான, முழுமையான வாழ்வை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் நான் உயிரோடு இருந்தபோது நாம் வாழ்ந்த வாழ்வை நீ தொடர வேண்டும். அதுதான் நீ என் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும்." இதுதான் அவர்களில் பெரும்பாலனவர்கள் சொல்லும் பதில். இப்படி அவர்கள் சொல்லும் அந்த அழகானப் பதிலை அவர்களே வாழும்படி Harold Kushner அறிவுரை சொல்வாராம்.
 சாவின் நிழலும், இருளும் சூழ்ந்த பள்ளத்தாக்கு வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான். இந்தப் பள்ளத்தாக்கினை பிறக்கும் ஒவ்வொருவரும் கடந்தே ஆக வேண்டும். ஆனால், இந்தப் பள்ளத்தாக்கின் வழி நாம் நடக்க வேண்டும், இங்கேயேத் தங்கிவிட கூடாது, தங்கிவிட முடியாது. இந்தப் பள்ளத்தாக்கின் பயணத்தில் அஞ்சாமல் நாம் நடக்க ஆயன் நம்முடன் வழி நடக்கிறார். மறந்து விட வேண்டாம்.







All the contents on this site are copyrighted ©.