2010-11-22 15:52:30

புதிய கர்தினால்களின் பணிகளுக்குச் செபம் மற்றும் ஒத்துழைப்பால் ஆதரவளிக்கத் திருத்தந்தை அழைப்பு


நவ.22,2010. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தொன்மையான குருகுலத்தோடு தொடர்புடைய கர்தினால்கள் குழுமம், புனித பேதுருவின் வழிவருபவரைத் தேர்ந்தெடுக்கவும் மிகமுக்கியமான விவகாரங்களில் அவருக்கு ஆலோசனை வழங்கவுமானப் பணியைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

திருச்சபையில் புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ள 24 பேரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களோடு தொடர்புடைய விசுவாசிகளை இத்திங்களன்று பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

24 புதிய கர்தினால்கள் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி வாழ்த்திய அவர், இக்கர்தினால்கள் வத்திக்கானில் தலைமைப்பீட அலுவலகங்களில் அல்லது உலகின் தலத்திருச்சபைகளில் என எங்கு அவர்கள் பணியாற்றியானாலும் அகிலத் திருச்சபைக்கானத் திருத்தந்தையின் பணியில் சிறப்பான விதத்தில் பங்கு கொள்ள அழைக்கப்ப்டடுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

இவர்கள் அணிந்துள்ள ஆடைகளின் நிறம் தங்கள் குருதியைச் சிந்தும் அளவுக்கு கிறிஸ்துவின் மந்தையைப் பாதுகாப்பதற்கானத் தங்களின் அர்ப்பணத்தைத் தெளிவாகக் காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்தக் கடினமான பணியை ஏற்றுள்ள இப்புதிய கர்தினால்கள் ஒன்றிப்பிலும் தூய்மையிலும் அமைதியிலும் கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பும் அவர்களின் முயற்சிகளுக்கு விசுவாசிகள் எல்லாரும் தங்களது செபத்தாலும் ஒத்துழைப்பாலும் ஆதரவாக இருப்பார்கள் என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.