2010-11-22 15:53:36

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


நவ.22, 2010. உலகெங்கும், குறிப்பாக கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளை அனுபவிக்கும் பகுதிகளில் மத சுதந்திரத்திற்காக, தலத்திருச்சபைத்தலைவர்களுடன் இணைந்து தானும் ஜெபிப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்தாலிய ஆயர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து கத்தோலிக்க சமூகங்கள், சித்ரவதை மற்றும் பாகுபாட்டு நிலைகளால் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக, குறிப்பாக ஈராக் மக்களுக்காக ஜெபிப்பதை நினைவூட்டிய திருத்தந்தை, உலகெங்கும் மத சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என தானும் அவர்களோடு இணைந்து ஜெபிப்பதாகக் கூறினார். தங்கள் விசுவாசத்திற்கு சாட்சி வழங்கி துன்புறும் மக்களோடு தன் அருகாமையையும் அறிவித்தார் பாப்பிறை.

திருச்சபையின் வழிபாட்டு அட்டவணையில் நவம்பர் 21ந் தேதி அன்னை மரி கோவிலில் காணிக்கையாக்கப்பட்ட திருவிழா இடம்பெறுவது குறித்தும் எடுத்துரைத்து, இறைவனுக்காக அடைபட்ட துறவு வாழ்க்கையைத் தேர்ந்துகொள்வோரை இந்நேரத்தில் சிறப்பான விதத்தில் நினைவுகூருவதாகவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

இயேசு கிறிஸ்துவின் அரசத்தன்மை குறித்தும் இம்மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்தார் பாப்பிறை. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்று வேண்டிய கள்வனுக்கு, இயேசு சிலுவையில் தொங்கிய போது மன்னிப்பளித்து ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, இயேசு தன் முடிவற்ற கருணையுடன் ஒவ்வொருவரையும் தன் சிலுவை எனும் அரியணையிலிருந்து ஏற்றுக்கொள்கிறார் என்றார்.








All the contents on this site are copyrighted ©.