2010-11-22 15:56:05

திருத்தந்தை கருத்தடைச் சாதன பயன்பாட்டை நியாயப்படுத்தவில்லை என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்


நவ.22, 2010. கருத்தடைச் சாதன பயன்பாடு குறித்து 'உலகின் ஒளி' என்ற புத்தகத்திற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கியுள்ள நேர்முகத்தில், கருத்தடைச் சாதன பயன்பாட்டை அவர் நியாயப்படுத்தவில்லை, மாறாக சில குறிப்பிட்ட சூழல்களில் அது ஒழுக்க நன்னடத்தை நோக்கிய முதல் படியாக இருக்கக்கூடும் என்பதையே தெரிவித்துள்ளார் என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.

கருத்தடைச் சாதன பயன்பாடு குறித்த திருத்தந்தையின் நேர்முகம் தந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள ஜெர்மன் எழுத்தாளர் பீட்டர் சீவால்டின் 'Light of the World' என்ற புத்தகம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட உள்ளது என்பதை எடுத்துரைத்த திருப்பீடப் பேச்சாளர், கருத்தடைச் சாதன பயன்பாடு என்பது மனிதர்களிடையேயான அன்பின் வெளிப்பாடு என்ற அர்த்தத்தை இழக்கவைப்பதாகவும், போதை மருந்து போல் மாறும் அபாயம் தருவதாகவும் உள்ளது என்ற பாப்பிறையின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.

எயிட்ஸ் பிரச்னைக்கு கருத்தடைச் சாதன பயன்பாடு, ஓர் உண்மையான, ஒழுக்க ரீதி தீர்வாக இருக்க முடியாது என்று திருத்தந்தை தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டார் குரு லொம்பார்தி.

திருச்சபைப் படிப்பினைகளை மாற்றுவதையல்ல, மாறாக அவற்றை மீண்டும் உறுதிப்படுத்துவதையே திருத்தந்தையின் இத்தகையக் கருத்துக்கள் காட்டுகின்றன என்று மேலும் கூறினார் அவர்.

உடலுறவு என்பது இன்னொருவரின் வாழ்வுக்கு உண்மையான அச்சுறுத்தலைக் கொடுக்கும் சூழல்களில், குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண்களின் நடவடிக்கைகளின்போது, கருத்தடைச் சாதன பயன்பாடு ஒழுக்க ரீதி நடவடிக்கை நோக்கிய முதல்படியாக இருக்கக்கூடும் என்ற திருத்தந்தையின் வார்த்தைகள், கருத்தடைச் சாதன பயன்பாட்டிற்கான திருச்சபையின் அங்கீகாரமாக தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் உரைத்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.