2010-11-20 15:27:15

நவம்பர் 21, நாளுமொரு நல்லெண்ணம்


"நம்மை நாமே கேளிக்கைகளில் சாகடிக்கிறோம்" (Amusing Ourselves to Death) என்பது 1986ம் ஆண்டு வெளிவந்த ஒரு நூல். அமெரிக்காவில் தொலைக்காட்சி ஏற்படுத்தி வந்த ஆழமான, ஆபத்தான தாக்கங்களை வெளிப்படுத்தும் வகையில் Neil Postman என்பவர் எழுதிய கருத்தாழம் மிக்க ஒரு நூல். தொலைக்காட்சி போன்ற தொடர்பு சாதனங்கள் வழியே நமது சிந்திக்கும் திறன் அதிகம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் Neil Postmanன் வாதம்.
இந்நூலின் வெளி அட்டையில் வரையப்பட்டிருந்த படம் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன் குடும்பமாய் ஒரு தாய், தந்தை அவர்களது இரு குழந்தைகள் அமர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே தலை மட்டும் இருக்காது. அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களும் இந்த ஒரு படத்தில் கூறப்பட்டதைப் போல் நான் உணர்ந்தேன். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளைச் சொல்லும் என்பதற்கு இந்த அட்டைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
தொலைக்காட்சியை அடிக்கடி 'தொல்லைக்காட்சி' என்று வேடிக்கையாகக் கூறி வருகிறோம். ஆனால், இந்தத் தொல்லை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம். அளவுக்கு மீறும் அமிர்தமும் நஞ்சாவது போல், 24 மணி நேரமும் நம்மைக் கேளிக்கைகளில் மூழ்க வைக்கும் தொலைக்காட்சி, நமது சிந்திக்கும் திறனைத் தொலைத்துவிடும் காட்சியாகாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியில் ஐ.நா.நிறுவனம் 1996ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி நாள் என்று அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.