2010-11-20 15:17:50

திருத்தந்தை : திருச்சபையின் பணி அதிகாரம் செய்வது அல்ல, மாறாகப் பணி செய்வது


நவ.20,2010. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை காலை நடைபெற்ற திருவழிபாட்டில் கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித் உட்பட 24 பேரை கர்தினால்களாக உயர்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இயேசு பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே வந்தார், இந்தச் செய்திமுழுத் திருச்சபைக்கும் உரித்தானது என்று இவ்வழிபாட்டில் மறையுரையாற்றினார் திருத்தந்தை.

திருச்சபையின் ஒவ்வொரு பணியும் எப்பொழுதும் இறைவனின் அழைப்புக்குப் பதில் சொல்வதாக இருக்கின்றது, இது ஒருவரின் சொந்த நோக்கம் அல்லது சொந்தத் திட்டத்தின் பலனாக அமைவது அல்ல, மாறாக, வானகத் தந்தையின், கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அமைகின்றது. திருச்சபையில் யாருமே தலைவர் கிடையாது. ஆயினும் நாம் அனைவரும் விண்ணக அருளால் அழைக்கப்பட்டு அதனால் வழிநடத்தப்படுகிறோம். என்னைப் பின்செல்லுங்கள் என்ற இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்து நமது அழைப்பை உணருவதன் மூலம் திருச்சபையில் நமது பணியை உணர முடியும். நாடுகளின் தலைவர்களாக இருப்பவர்கள் அதிகாரம் செய்து அடக்குபவர்களாக இருக்கிறார்கள், ஆனால் இயேசுவின் சீடர்கள் முற்றிலும் இதற்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று இந்நாளைய நற்செய்தி கூறுகிறது என்றார் திருத்தந்தை.

கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள இவர்களுக்கு இறைமகனின் பாதையில் செல்வதற்கு இன்னும் அதிகப் பொறுப்பு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

புதிய கர்தினால்களுக்காகச் செபிக்குமாறும் இறைமக்கள் சமுதாயத்தைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

“திருசசபையின் இளவரசர்கள்” என அழைக்கப்படும் கர்தினால்கள் குழுமத்தில் இலங்கை, இத்தாலி, எகிப்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு, பிரேசில், ஜாம்பியா, ஈக்குவதோர், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து 24 புதிய இளவரசர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் பத்துப் பேர் இத்தாலியர்கள்.

இப்புதிய கர்தினால்களுள் 22 பேர், புதிய பாப்பிறையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.

இப்புதிய கர்தினால்கள் ஒவ்வொருவரும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற சிவப்புத் தலைப்பாகையும் அவர்கள் அணியும் சிவப்புநிற அங்கியும் அவர்கள் திருச்சபைக்காக இரத்தம் சிந்தத் தயாராக இருப்பதன் அடையாளமாக இருக்கின்றன. மேலும், அந்தத் தொப்பியைப் பெற்ற போது தாங்கள் திருத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும் உறுதி அளித்தனர். திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவது கர்தினால்களின் முக்கிய பணியாகும். மேலும் இவர்கள் புதிய பாப்பிறையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள்.

இச்சனிக்கிழமையோடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 203. இவர்களில் எண்பது வயதுக்கு உட்பட்டவர்கள் 121 மற்றும் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 82.







All the contents on this site are copyrighted ©.