2010-11-18 13:03:54

நவம்பர் 19 நாளும் ஒரு நல்லெண்ணம்


நவம்பர் 19 உலகக் கழிப்பறை நாள்

உலக அளவில் கழிப்பறை மற்றும் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் Jack Sim என்பவர் WTO என்ற உலகக் கழிப்பறை நிறுவனம் என்ற ஓர் அமைப்பை 2001ல் 15 உறுப்பினர்களுடன் உருவாக்கினார். தற்சமயம் இதில் 53 நாடுகளின் 151 நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. கழிப்பறைகளை வடிவமைக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் பள்ளிகளில் சுகாதாரத்தைக் கற்றுக் கொடுக்கவுமென இந்நிறுவனம் 2005ல் முதல் உலகக் கழிப்பறைக் கல்லூரியைத் தொடங்கியது. உலகக் கழிப்பறை நிறுவனம் உருவாக்கப்பட்ட நவம்பர் 19ம் தேதி உலகக் கழிப்பறை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உலகக் கழிப்பறை வசதி மாநாடு நடந்து வருகிறது. 2001ல் சிங்கப்பூரிலும் 2007ல் புதுடெல்லியிலும் நடைபெற்றுள்ளன. உலக மக்கள் தொகையில் நாற்பது விழுக்காட்டினர் அதாவது 260 கோடி மக்கள், கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் எழுபது கோடி மக்கள் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள். உலக அளவில், எல்லாருக்கும் சுத்தமானக் குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு எல்லாருக்கும் சுகாதாரமானக் கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது என்று கூறப்படுகிறது. சுகாதாரமானக் கழிப்பறைகள் நலமான வாழ்க்கைக்கான உத்தரவாதம்.

சுத்தம் சோறு போடும், சுத்தம் சுகம் தரும்.








All the contents on this site are copyrighted ©.