2010-11-18 15:19:05

நலப் பணியாளர்களுக்கானத் திருப்பீட அவையின் கூட்டத்திற்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


நவ.18, 2010. மனிதராக வாழ்வதற்கும், மாண்பு, மற்றும் மீறமுடியாத மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் மனிதனுக்கான குணமளித்தல் என்பது மையமானது என்ற கருத்தை வலியுறுத்தி, நலப் பணியாளர்களுக்கானத் திருப்பீட அவையின் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்திருப்பீட அவை துவக்கப்பட்டதன் 25வது ஆண்டில் இடம் பெறும் 25வது அனைத்து நாடுகளின் கருத்தரங்கில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இன்றைய உலகில் எண்ணற்ற மக்கள் நல ஆதரவுத் தேவைகளை நிறைவேற்ற முடியாநிலையில் வாழ்வதையும் அச்செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனித குலத்திற்கான பணி என நோக்கப்பட வேண்டிய நலஆதரவுத் திட்டங்களில், சுயநலப் போக்குகள் புகுவதற்கான ஆபத்தையும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நலஆதரவு தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என விண்ணப்பிக்கும் திருத்தந்தையின் செய்தி, இயேசுவின் 'நல்ல சமாரியன்' உவமையையும் மேற்கோள் காட்டியுள்ளது.

கருவில் வளரும் உயிர்கள் சோதனைக்கென அழிக்கப்படுதல், கருணைக் கொலை ஆகியவைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் திருத்தந்தை, உலகில் துன்புறுவோருடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும் தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.